Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசினர் பாதுகாப்பு இடம், சிறார் இல்லத்தில் குழந்தைகள் நலத்துறை இயக்குநர் திடீர் ஆய்வு

செங்கல்பட்டு, ஜூலை 24: அரசு சிறப்பு இல்லம் மற்றும் அரசினர் பாதுகாப்பு இடத்தில் சிறார்களிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்ட எதிரொலியாக குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இயக்குநர் திடீர் ஆய்வு நடத்தினார். செங்கல்பட்டில் சமூக நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் அரசினர் சிறப்பு இல்லம் மற்றும் அரசினர் பாதுகாப்பு இடம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக 21 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உள்ளனர்.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில் 18 வயதிற்குட்பட்ட 35க்கும் மேற்பட்ட சிறுவர்களும், ஆத்தூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் 50க்கும் மேற்பட்ட 18 முதல் 21 வயது உடைய சிறுவர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 11ம் தேதி செங்கல்பட்டு பாதுகாப்பு இடத்தில் ஆசிரியர்கள் மற்றும் காவலாளி உள்ளிட்டோரை தாக்கி, சாலையில் சென்ற இரு சக்கர ஓட்டிகளையும் தாக்கி அவர்களிடம் இருந்து 3 பைக், ஐந்து செல்போன்கள், பணம் உள்ளிட்டவற்றை சிறுவர்கள் பறித்துச் சென்றனர். தொடர்ந்து 16ம் தேதி அரசினர் சிறப்பு இல்லத்தில் ஒரு சிறுவனை 10க்கும் மேற்பட்டோர் சேர்ந்து தாக்கியதில் பலத்த காயமடைந்த சிறுவனுக்கு தலையில் 22தையல்கள் போடப்பட்டது.

இந்நிலையில், அரசினர் சிறப்பு இல்லத்தில் நேற்றுமுன்தினம் இரவும் சிறுவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிறப்பு இல்லத்தின் உள்ளே இருந்த பொருட்களை சிறார்கள் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரசினர் பாதுகாப்பு இடம் மற்றும் அரசினர் சிறப்பு இல்லத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இயக்குனர் சுப்புலட்சுமி திடீரென நேற்று மதியம் வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட குழந்தைகள் நல இயக்குநர், சிறார்களின் பிரச்னைகள் குறித்தும், அதிகாரிகளின் பிரச்னைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் சுமார் ஒரு மணி நேரம் நடத்திய ஆய்விற்கு பிறகு அங்கிருந்து கிளம்பி சென்றார்.