Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தையூர் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

திருப்போரூர், ஜூலை 24: திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தையூர் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய தையூர் கிராமத்தில் 5 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த, நிலம் தையூர் கிராம இளைஞர்களால், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த, நிலத்தின் ஒரு பகுதியை தனியார் ரியல் எஸ்டேட் அதிபர்கள், தங்கள் நிலத்திற்கு செல்ல சாலையாக மாற்ற முயற்சி செய்வதாக கூறி அந்த நிலத்தை ஆக்கிரமிக்கவும், நிலத்தின் வகைப்பாட்டை மாற்றவும் அரசு அதிகாரிகளின் துணையோடு செய்வதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, அவ்வப்போது தையூர் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர். நீண்ட நாட்களாக இந்த நிலம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில். தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மீண்டும் நிலத்தை கைப்பற்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் முயற்சி செய்வதாகவும், அதற்கு வருவாய்த்துறையினர் துணை போவதாகவும் கூறி தையூர் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்துகொண்டு வருவாய்த் துறையினருக்கு எதிராகவும், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதையடுத்து திருப்போரூர் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்து மனு அளித்து, நிவாரணம் பெறுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து பொதுமக்களும், இளைஞர்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.