குன்றத்தூர், அக்.23: சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை வளாகத்திற்குள் உள்ள கைதிகள் காலையில் அறைகளில் இருந்து திறந்து விடப்பட்டு மீண்டும் மாலையில் அவரவர் அறைகளில் அடைக்கப்படுவது வழக்கம். மேலும் தண்டனை கைதிகள் சிறை வளாகத்தை தூய்மைப்படுத்துதல், சிறை சார்பில் நடத்தப்பட்டு வரும் இரண்டு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேபாள நாட்டை சேர்ந்த சுதீப் போகதி என்ற கைதியும், நேற்று தண்டனை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ் என்ற கைதியும் அடுத்தடுத்து சிறையிலிருந்து தப்பி ஓடினர்.
அடுத்தடுத்து சிறையில் இருந்து தப்பி ஓடிய 2 கைதிகளை புழல் காவல்துறையினர் வழக்குப்பதிந்து தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னை அண்ணா நகரில் பதுங்கி இருந்த நேபாள கைதி சுதீப் போகதியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதேபோல், மற்றொரு கைதி சுரேஷ் குன்றத்தூர் பகுதியில் மறைந்திருந்தபோது, அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் மேற்கண்ட இரண்டு கைதிகளையும் மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.
பல அடுக்கு பாதுகாப்பு நிறைந்த புழல் மத்திய சிறை வளாகத்தில் இருந்து தப்பி சென்றது எப்படி என தீவிர விசாரணை நடத்தி, அது குறித்த ஒத்திகை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். உயர் கண்காணிப்பு கோபுரம், சிசிடிவி கேமரா காட்சிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு என பலத்த பாதுகாப்பு நிறைந்த புழல் சிறையின் பாதுகாப்பில் குளறுபடிகள் காரணமாக கைதி தப்பி ஓட்டம் பிடித்தாரா என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் சிறை வட்டாரத்தில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறை அலுவலர் உட்பட ஏழு பேர் பணியிடை நீக்கம்
சென்னை புழல் விசாரணை சிறையில் இருந்து தப்பிய கைதி வழக்கில் உதவி சிறை அலுவலர் ஜோதிராமன், காவலர்கள் அலெக்ஸ் கிருஷ்ணராஜ், குணசேகர், ராஜேஷ் கண்ணா ஆகிய நான்கு பேரும் மற்றும் புழல் தண்டனை சிறையில் கைதி தப்பிய வழக்கில் தலைமை காவலர் கண்ணதாசன் காவலர்கள் மணி, பிரகாஷ் ஆகிய காவலர்கள் உட்பட 3 பேரும் மொத்தத்தில் ஏழு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை தலைவர் சந்திப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.


