லோடு வாகனம் மூலம் கயிறு கட்டி இழுத்து செல்லப்பட்ட ‘வெற்றிப் பயணம்’ திட்ட பேருந்து : காஞ்சிபுரத்தில் பரபரப்பு
காஞ்சிபுரம், அக்.23: காஞ்சிபுரம் அருகே லோடு வாகனம் மூலம் கயிறு கட்டி இழுத்து செல்லப்பட்ட வெற்றிப் பயணம் திட்ட பேருந்தால் பெரும் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளிலும் 80 கிலோ மீட்டர் தூரம் கட்டணமில்லாமல் செல்லும் வகையில், வெற்றிப் பயண திட்டத்தை தவெக அரசு அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி உள்ளது. இத்திட்டத்திற்கு பெருமளவு சிஎன்ஜி எனப்படும் பெட்ரோல், டீசல் இல்லாமல் எரிவாயு மூலம் இயக்கப்படும் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், காஞ்சிபுரத்தில் இருந்து பனப்பாக்கம் வழித்தடத்தில் செல்லும் தமிழக அரசின் ‘வெற்றிப் பயணம்’ திட்ட பேருந்து ஒன்று, லோடு வாகனத்தில் கயிறு கட்டி இழுத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி, பேசும் பெருளாகியுள்ளது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், இதுகுறித்து வட்டாரங்களில் விசாரித்தபோது, எரிவாயு கிடைக்காததால்தான் பேருந்தினை கயிறு கட்டி இழுத்து செல்லும் நிலை ஏற்பட்டிருக்ககூடும் என தெரிவிக்கின்றனர்.
மேலும், எப்போதுமே பரபரப்பாக காணப்படும் காஞ்சிபுரம் - பனப்பாக்கம் பேருந்து, வாகனம் மூலம் கயிறு கட்டி இழுத்துச் செல்லப்படுவதை கேள்விப்பட்டு அதிர்ச்சியான பொதுமக்கள், தவெக ஆட்சியில் பொதுமக்கள் நிலைமை இப்படித்தான் என்று புலம்பி வருகின்றனர். நேற்று முன்தினம் இதேபோல் மதுராந்தகம் அருகே வெற்றிப் பயண திட்டத்தின் பேருந்து சக்கரங்கள் கழன்றன. இதில் அதிர்ஷ்டவசமாக அதில் சென்ற பயணிகள் உயிர் தப்பினர்.
தற்போது லோடு வாகனம் இழுத்துச் செல்லும் அளவுக்கு மற்றொரு வெற்றிப் பயண பஸ்சின் நிலை உள்ளது, இலவச பஸ் என்பதால் போக்குவரத்து அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனரா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் அதிகமாக எழுந்துள்ளது.


