Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 25ம் தேதி முதல் தூய்மை திருவிழா: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு, மே 23: செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 25ம் தேதி முதல் தூய்மை திருவிழா நடைபெற உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த மாதம் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்டம் முழுவதும் வரும் 25ம் தேதி ஆரம்பித்து ஜூன் 5ம் தேதி வரை 10 நாட்கள் தூய்மை பணி பல்வேறு அரசு துறைகள் மற்றும் தன்னார்வலர்கள் முயற்சியோடு நடைபெற உள்ளது.

இந்நிகழ்வின் முதல் கட்டமாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் செங்கல்பட்டு நகராட்சியின் சார்பில் செங்கல்பட்டில் உள்ள 33 வார்டுகளை நகராட்சி ஊழியர்கள் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பயனாளிகள், என்ஜிஓ ஆகியோர் துணையுடன் தூய்மை திருவிழா நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வின் ஒரு கட்டமாக சேகரிக்கப்படும் நெகிழி மற்றும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை கொண்டு நெகிழியினால் ஏற்படும் இயற்கை சீரழிவுகளை விவரிக்கும் நோக்கத்தில் கலைநயமிக்க சிற்பங்கள் செய்யப்பட இருக்கிறது, மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘வேஸ்ட் வெல்த்’ போட்டி நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்வில் சிறந்த சிற்பங்களை உருவாக்குபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகளை ஜூன் 5ல் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலெக்டர் வழங்க உள்ளார். இந்நிகழ்வில் தினமும் குப்பைகளை தரம் பிரித்து தரும் இல்லங்களுக்கு ‘கிரீன் ஹோம்’ என்ற பாராட்டு சான்றிதழையும் கலெக்டர் வழங்க உள்ளார். அதேபோல் ஒரு தெருவில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரீன் ஹோம்கள் உருவானால் அந்த தெருவிற்கு ’கிளீன் ஸ்ட்ரீட்’ என பெயரிடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அனைவரும் பங்குபெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.