Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

பெரும்புதூர், மே 22: காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதும் அருணகிரியாரின் திருப்புகழ் பெற்றதுமாகிய இக்கோயில் கல்யாண பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் 7 ஆண்டுகளுக்கு கிராம தேவதை, விநாயகர் உற்சவத்துடன் பிறகு வைகாசி விசாக பிரம்மோற்சவம் விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, அதிகாலை 3.30 மணிக்கு மூலவர் வள்ளி, தெய்வானை - சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. உற்சவருக்கும் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அவருடன் விநாயகர், அஸ்திராயர் ஆகியோருக்கும் அபிஷேகம் நடைபெற்று எழுந்தருளினர்.

அதிகாலை 4.30 மணிக்கு 6 அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓதிட மங்கல வாத்தியங்கள் முழங்கிட முருகப்பெருமானின் வாகனம் மயில் உருவம் பொறித்த கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து முருகப்பெருமான் சவுடால் சப்பரத்தில் எழுந்தருளி வல்லக்கோட்டை கிராமத்தில் வீதி உலா வந்தார். அவருடன் விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் வீதி உலா வந்தனர். மாலையில் வெள்ளி மயில் வாகன உற்சவம் நடைபெற உள்ளது. பிரமோற்சவத்தை முன்னிட்டு கோயில் ராஜகோபுரம், விமானங்கள், மண்டபங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

தொடர்ந்து, இன்று காலையில் சூரியபிரபையும் மாலையில் சந்திரபிரபையும், 23ம் தேதி காலையில் கேடய உற்சவமும், மாலையில் ஆட்டுக்கிடா வாகனமும், 24ம் தேதி காலை கேடயம் மாலையில் கேடயமும், 25ம் தேதி காலை கேடயமும், மாலையில் அன்னவாகன உற்சவமும் நடைபெற உள்ளது. 26ம் தேதி காலை கற்பக விருட்ச வாகனமும், மாலையில் கேடய உற்சவமும், 27ம் தேதி காலையில் உள்புறப்பாடு ரதமும், மாலையில் மகா அபிஷேகமும், 28ம் தேதி காலை ஆள்மேல் பல்லக்கும், மாலையில் குதிரை வாகனமும், 29ம் தேதி காலை தல விருட்ச வாகனமும், மாலையில் கல்யாண உற்சவமும், இதனைத்தொடர்ந்து பெரிய மயில் வாகன உற்சவமும், 30ம் தேதி காலை சிறிய மயில் வாகனமும், தீர்த்தவாரியும், மாலையில் புஷ்ப பல்லக்கு முடிந்து கொடியிறக்கமும், 31ம் தேதி காலை சண்டிகேசர் வெள்ளி இடப வாகனம் மாலையில் விடையாற்றி உற்சமும் நடைபெற உள்ளது.

பிரமோற்சவத்தை முன்னிட்டு நாள்தோறும் கோயில் மயில் மண்டபத்தில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளும், சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெற உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் சி.குமரதுரை அறிவுரைப்படி கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் மற்றும் அறங்காவலர் குழுவினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.