Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாமல்லபுரத்தில் ஒன்றிய அரசின் சுவதேஷ் தர்ஷன் 2.0 திட்டம் மூலம் ரூ.30 கோடியில் மேம்பாட்டுபணிகள் விரைவில் தொடக்கம்: தடையில்லா சான்று பெற அதிகாரிகள் ஆய்வு

மாமல்லபுரம், மே 22: மாமல்லபுரத்தில் ஒன்றிய அரசின் ரூ.30 கோடி மதிப்பிலான சுவதேஷ் தர்ஷன் 2.0 திட்டம் மூலம் மேம்பாட்டு பணிகளை விரைவில் தொடங்குவதற்கான தடையில்லா சான்று பெறுவதற்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாமல்லபுரம் உலக அளவில் சுற்றுலாவிற்கு பெயர் போன நகரமாக திகழ்ந்து வருகிறது. இங்கு, கடந்த 7ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் கடற்கரை கோயில் உள்ளிட்ட பல்வேறு புராதன சின்னங்களை அழகுர செதுக்கினர். இந்த புராதன சின்னங்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால், ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என லட்சகணக்கானோர் வந்து செல்கின்றனர். வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பலர் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் வாழும் மக்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் முறைகள், பழங்கால கோயில்கள், பாரம்பரிய நினைவு சின்னங்கள், மன்னர்களின் வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்ள அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அதில், குறிப்பாக மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்கள் அழகுர செதுக்கிய புராதன சின்னங்களை பார்வையிட்டு, அதனை செதுக்கிய மன்னர்களின் வரலாறுகளை தெரிந்து கொள்ள ஆண்களை விட பெண்களே அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர். அப்படி, மாமல்லபுரம் வரும் வெளிநாட்டினர் இங்குள்ள ரிசார்ட்டு, ஓட்டல்கள் மற்றும் பண்ணை வீடுகளில் 10 நாட்கள் அல்லது 2 வாரங்களுக்கு மேலாக தங்கி ஜாலியாக சுற்றி பார்க்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்ப கடற்கரை, சுற்றுலாப் பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழலை பராமரிப்பது அவசியமாக உள்ளது. மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களால், சுற்றுலாப் பயணிகள் வருகை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு போதிய வருவாய் கிடைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரை பகுதிகளில் ஆக்கிரமிப்பு பகுதிகள் இல்லாமல் காலியாக காணப்பட்டது.

மேலும், கடற்கரை கோயில் செல்லும் வழி, கடற்கரைக்கு செல்லும் வழியில் உள்ள கடைகள் சாலையை ஆக்கிரமித்ததால் சாலைகள் குறுகி காணப்படுகிறது. இதையடுத்து, ஒன்றிய அரசின் சுவதேஷ் தர்ஷன் 2.0 திட்டம் மூலம் சுற்றுலாவை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கடற்கரை பகுதியில், சுமார் 20க்கும் ஏக்கர் பரப்பளவில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்காக, சுவதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தை கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். ஆனால், பணிகளை தொடங்குவதற்கு இடத்தை தேர்வு செய்வதில் பெரிய அளவிலான குழப்பம் நீடித்து வந்தது. இதனால், சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள காலதாமதம் ஏற்பட்டது. இதையடுந்து, வருவாய்த்துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்து சுவதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்துக்கு இடத்தை தேர்வு செய்தனர்.

இந்நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையிலும், எந்த இடையூறும் இல்லாமல் சுலபமாக வந்து ஜாலியாக பொழுதை கழிக்கும் வகையிலும், கடற்கரைக்கு அருகே 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் பார்க்கிங் வசதி, அலங்கார வளைவு, சாலை வசதி, கழிப்பறை, உணவகம், சிசிடிவி கேமரா, பசுமை புல்வெளி, அலங்கார மின் விளக்குகள், சங்கு மணி விற்கும் கடை, பயணிகள் அமர இருக்கைகள், முதலுதவி சிகிச்சை மையம், செக்யூரிட்டி அறை மற்றும் 64 சாலையோர கடைகளை அழகுபடுத்துதல் என பல்வேறு மேம்பாட்டு பணிகளை தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. மேலும், ஒன்றிய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்கள் பகுதிகளுக்கு அருகே சுவதேஷ் 2.0 திட்டப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதால், கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றிய தொல்லியல் துறையிடம் இருந்து மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள தடையில்லா சான்று பெறாமல் இருந்தது.

இதனால், பணிகளை தொடங்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டு, இத்திட்டமே வேறொரு மாநிலத்துக்கு கொண்டு செல்ல ஒன்றிய அரசு திட்டமிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தொல்லியல் துறையிடம் இருந்து தடையில்லா சான்று பெறுவதற்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல் தலைமையில், தொல்லியல் துறை சென்னை வட்ட கண்காணிப்பாளர் சுஷாந்த குமார் கர், துணை கண்காணிப்பாளர் ராஜேஷ், மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் தர் ஆகியோர் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யும் பணிக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அளவீடு பணிகளை அறிக்கையாக தயார் செய்து ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி, விரைவில் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்கனர். இதனால், சுற்றுலா பயணிகள், சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சுவதேஷ் தர்ஷன் 2.0 திட்ட பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது அவசியமாக உள்ளது. அந்த வகையில், மாமல்லபுரத்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் ஒன்றிய அரசு சுவதேஷ் தர்ஷன் 2.0 திட்டம் மூலம் ரூ.30 கோடி ரூபாயை கடந்த 2 ஆண்டுக்கு ஒதுக்கியது. கடற்கரையையொட்டி, ரூ.30 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை தமிழ்நாடு கற்றுலாத்துறை மேற்கொள்ளவுள்ளது.

இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த பணிகளை கால தாமதமின்றி விரைந்து தொடங்கி உடனடியாக முடிக்க வேண்டும். அப்படி முடிக்கும் பட்சத்தில் இந்தாண்டு இறுதியில் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் வருவார்கள் என எதிர் பார்க்கலாம் என்றனர்.

தடையில்லா சான்றை தாமதமின்றி பெற வேண்டும்

சுவதேஷ் 2.0 திட்டப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள, ஒன்றிய தொல்லியல் துறையிடமிருந்து தடையில்லா சான்றை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அதிகாரிகள் விரைந்து பெற வேண்டும் என கடற்கரை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடை மாற்றும் அறை

மாமல்லபுரம் சுற்றுலா வரும் பயணிகள் புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, கடற்கரைக்கு சென்று கடலில் இறங்கி குளித்துவிட்டு, உடை மாற்றுவதற்கு இடம் இல்லாததால், 1 கி.மீ தூரம் நடந்து வந்து நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கழிப்பறைக்கு சென்று உடை மாற்றுகின்றனர். எனவே, சுவதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தில் கடற்கரையையொட்டி உடை மாற்றும் அறை கட்ட வேண்டும் என பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.

24 மணி நேரமும் தரமான குடிநீர் வசதி

மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு 24 மணி நேரமும் தடையின்றி தரமான குடிநீர் கிடைக்கும் வகையில், குடிநீர் சுத்திரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். அதிகளவு வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி, கடற்கரை கோயில் செல்லும் வழி, ஐந்து ரதம் என 2 இடங்களில் பார்க்கிங் வசதி உள்ளது. இங்கு, 25 முதல் 40 வாகனங்கள் நிறுத்தும் அளவில் மட்டுமே இடவசதி உள்ளது. இதனால், மற்ற வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, வாகனங்கள் அதிகளவில் நிறுத்தும் வகையில், தாராளமான பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

தண்ணீர் வசதியுடன் தரமான கழிப்பறை வசதி

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்கள் பகுதியில் குறைந்த அளவிலான கழிப்பறைகளே உள்ளன. இதனால், இயற்கை உபாதையை கழிக்க சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சுவதேஷ் தர்ஷன் 2.0 திட்டம் மூலம் கட்டப்படும் கழிப்பறைகள் தண்ணீர் வசதியுடன் ஒரே நேரத்தில் அதிகமானோர் பயன்படுத்தும் வகையில், தரமாக கட்ட வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.