Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பில்களை முடித்து பணம் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் பணிகள் முடிந்ததாக ஓய்வு பொறியாளர்களிடம் கையெழுத்து வாங்கும் ஒப்பந்ததாரர்கள்: தாம்பரம் மாநகராட்சியில் புதிய சர்ச்சை

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் சாலை, மழைநீர் வடிகால், கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒப்பந்ததாரர்கள் பணிகளை முடித்த பின்னர், சம்பந்தப்பட்ட மாநகராட்சி பொறியாளர்கள் அந்தப் பணிகளை நேரில் ஆய்வு செய்து, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவு மற்றும் தரத்தில் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கையெழுத்திடுவது வழக்கமான நடைமுறையாகும்.

இந்நிலையில், சில ஒப்பந்ததாரர்கள் தங்களது பணிகளுக்கான பில்களை முடித்து பணம் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், தற்போதுள்ள பொறியாளர்கள் பணிகளை ஆய்வு செய்து கையெழுத்திடுவதற்கு முன்பு பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், சில ஒப்பந்ததாரர்கள் தரப்பில், தற்போது பணியில் உள்ள பொறியாளர்களிடம் பணிகள் தொடர்பான கோப்புகள் மற்றும் அளவீடுகளுக்கு கையெழுத்து பெறுவதில் சிக்கல் ஏற்படுவதால், ஏற்கெனவே அந்த பணிகளை கவனித்த ஓய்வு பெற்ற பொறியாளர்களை அணுகி, அவர்களிடம் பணிகள் முடிக்கப்பட்டதற்கான கையெழுத்தை பெறுவதாக கூறப்படுகிறது. இதற்காக ஓய்வு பெற்ற பொறியாளர்களின் வீடுகளுக்கே ஒப்பந்ததாரர்கள் சென்று கையெழுத்து பெறுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

மாநகராட்சியில் தற்போது பணியில் இருக்கும் பொறியாளர்கள் பணிகளை ஆய்வு செய்து சான்றளிக்க வேண்டிய நிலையில், ஓய்வு பெற்ற அதிகாரிகளிடம் கையெழுத்து பெறப்படுவது எந்த விதிமுறையின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் நடைமுறைகள் தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், பணிகள் நிறைவு, அளவீடு, தர ஆய்வு, கையெழுத்து மற்றும் அதற்கான நிதி வழங்குதல் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டியது அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஒரு பணியை யார் மேற்பார்வையிட்டனர், பணிகள் எப்போது நிறைவு செய்யப்பட்டன, அதன் அளவீடுகளை யார் பதிவு செய்தனர், தற்போது அந்தப் பணிக்கான இறுதி சான்றிதழை வழங்கும் பொறுப்பு யாரிடம் உள்ளது என்பவை அனைத்தும் மாநகராட்சி ஆவணங்களில் தெளிவாக இருக்க வேண்டும். ஓய்வு பெற்ற பொறியாளர்கள் உண்மையில் சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் பணியை ஆய்வு செய்திருந்தால், அவர்களிடம் இருந்து தற்போது கையெழுத்து பெறுவதற்கான சட்டபூர்வ அல்லது நிர்வாக நடைமுறை என்ன என்பதையும் மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தாம்பரம் மாநகராட்சியின் புதிய ஆணையர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக ஆவடி மாநகராட்சி ஆணையர் கவனித்து வரும் நிலையில், இந்தப் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது நிலுவையில் உள்ள ஒப்பந்தப் பணிகள் குறித்த முழுமையான பட்டியலை தயாரித்து, ஒவ்வொரு பணியையும் சம்பந்தப்பட்ட தற்போதைய பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பணியின் அளவு, தரம், ஒப்பந்த நிபந்தனைகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட பணிகளின் உண்மை நிலை ஆகியவற்றை சரிபார்த்த பிறகே ஒப்பந்ததாரர்களுக்கான தொகையை வழங்க வேண்டும்.

மேலும், ஓய்வு பெற்ற பொறியாளர்களிடம் கையெழுத்து பெறப்பட்டதாக கூறப்படும் பணிகள் தொடர்பான கோப்புகளையும் ஆய்வு செய்து, அந்தக் கையெழுத்துகள் எந்த அடிப்படையில் பெறப்பட்டன என்பதையும் மாநகராட்சி நிர்வாகம் விசாரிக்க வேண்டும். தற்போதைய பொறியாளர்கள் பணிகளை ஆய்வு செய்து உரிய சான்றுகளை வழங்குவதற்கான வெளிப்படையான நடைமுறையை ஏற்படுத்துவதுடன், ஒப்பந்ததாரர்களிடமிருந்து பணம் அல்லது வேறு எந்தவிதமான தனிப்பட்ட பலனும் கோரப்படவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.