Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

செங்கல்பட்டு‌ காவல்நிலையம் எதிரே அழுகிய காய்கறி, பழங்கள் மாடுகள் குவிந்து அட்டகாசம்: கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகம்

செங்கல்பட்டு, ஜூலை 20: செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட நகர காவல்நிலையம் நேர் எதிரே காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் அதிகாலை 4 மணி முதலே செயல்பட தொடங்கிவிடும். இந்த மார்க்கெட்டை ஒட்டியே காவல்நிலையம்‌, மசூதி, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் அருகிலேயே செங்கல்பட்டு நகராட்சி அலுவலகமும் உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌ பிரதான சாலையை ஒட்டியே செயல்படுவதால் தினசரி காலை முதல் இரவு வரை பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இங்கு வருகின்றன.

இந்த காய்கறி மார்க்கெட்டில் அழுகிப்போன காய்கறிகள், பழங்கள் அனைத்தையும் செங்கல்பட்டு-காஞ்சிபுரம் பிரதான சாலையிலேயே கொட்டி வருகிறார்கள். இந்த அழுகிப்போன காய்கறி, பழங்களை திண்பதற்காக எந்நேரமும் 10 முதல் 20 மாடுகள் சாலையை ஆக்கிரமித்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. பின்னர் சிதறிய காய்கறிகள் சாலையில் கிடக்கிறது. ஒருபுறம் மாடுகளின் அட்டகாசமும், மறுபுறம் சாலையில் சிதறி கிடக்கும் அழுகிபோன காய்கறி கழிவுகளாலும் சாலையில் நடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள்‌.

மாடுகள் சாலைகளை ஆக்கிரமித்து துள்ளிக்குதித்து விளையாடுவதால் பைக்கில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் காவல்நிலையம் எதிரே தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து காவல்துறையோ, நகராட்சி நிர்வாகமோ நிரந்தரமான நடவடிக்கை எடுக்கவில்லை.

மிகப்பெரிய விபத்து நடந்த பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும், இங்கு‌ காய்கறி கழிவுகளை கொட்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் இங்கு வியாபாரம் செய்ய தடை விதித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தரப்பில் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில் இதற்கு நிரந்தர தீர்வு காணவில்லை என்றால் செங்கல்பட்டு கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.