Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் அமைக்கப்பட்ட வேகத்தடையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி, மே 19: வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்திற்காக அமைக்கப்பட்ட வேகத்தடையால் தினந்தோறும் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இதன் அருகே ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் கல்விக்காக உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு வரும் உயர் அதிகாரிகளுக்காக உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் எதிரே உள்ள சாலையின் இருபுறமும் தேவையில்லாமல் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.

இதில், பகல் மற்றும் இரவு நேரங்களில் பைக் ஆட்டோ கார் வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அதிவேகமாக வருபவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் மோதி திடீரென பிரேக் போடுகின்றனர். இதனால், அப்பகுதியில் ஒன்றன்பின் ஒன்றாக வரும் வாகனங்கள் முட்டி மோதி நிற்கின்றன. இதனால், வாகன ஓட்டிகளுக்கிடையே தேவை இல்லாமல் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த சாலையில் ஆங்காங்கே மண் பரிசோதனைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் இதுவரை மூடப்படவில்லை. மேலும், ஏற்கனவே வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே உள்ள சிக்னல், அதன் அருகில் தனியார் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திற்காக அமைக்கப்பட்ட வேகத்தடையால் மணி கணக்கில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேவையில்லாமல் அதன் அருகிலேயே உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்திற்காக போடப்பட்ட வேகத்தடையால் அப்பகுதியில் உள்ள சாலை பல்லாங்குழியாக காட்சியளித்து வருகிறது. இதனால் அவசர ஆபத்துக்கு செல்லக்கூடிய 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல், அனைத்து தரப்பு பொதுமக்களும் குறித்த நேரத்திற்கு சென்று வர முடியாமல் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் எதிரே சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.