Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காதல் விவகாரத்தில் வாலிபருக்கு வெட்டு: இருவரிடம் போலீசார் விசாரணை.

திருப்போரூர், ஆக.18: கேளம்பாக்கம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேளம்பாக்கம் அடுத்த தையூர், சின்னமா நகரை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகன் பிரவீன்குமார் (23). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், தனது வீட்டிற்கு அருகே சாலையோரம் நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, ஒரு காரில் வந்த கும்பல் முகவரி கேட்பதுபோல் பிரவீன்குமாரிடம் பேசினர். அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, பின்னால் இருந்த 3 பேர், பிரவீன்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதில் அவரது தலை, இரண்டு கைகள், முதுகு ஆகிய இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே அந்த கும்பல் காரில் தப்பிச் சென்றது. பலத்த காயமடைந்த பிரவீன்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நடத்திய விசாரணையில், பிரவீன்குமார் தையூர் கிராமத்தை சேர்ந்த ஒருவரின் மகளை தீவிரமாக காதலித்து வந்ததாகவும், அது பிடிக்காத அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இச்செயலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.