Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பணிகள் முடிந்தும் பயன்பாட்டுக்கு வராமல் இழுத்தடிப்பு; புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கப்படாததை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை: கூடுவாஞ்சேரியில் நள்ளிரவு பரபரப்பு

கூடுவாஞ்சேரி, ஜூலை 18: கூடுவாஞ்சேரியில் பணிகள் முடிந்தும் பயன்பாட்டுக்கு வராத டிரான்ஸ்பார்மரை இயக்கிக் கோரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட மூலக்கழனி கிராமத்தில் பல ஆண்டுகளாக குறைந்த மின்னழுத்த பிரச்னை இருந்து வந்தது. இதனால் டிவி, மின்விசிறி, மிக்சி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மின் மோட்டார் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அடிக்கடி பழுதாகி வந்தன. மேலும் இரவு நேரங்களில் கொசுக்கடியால் பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், நோய்வாய்ப்பட்டோர், வயதானவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் வலியுறுத்தியதன் பேரில் அப்பகுதியில் கடந்த மாதம் 8ம் தேதி புதிய மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. ஆனால் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு 18 நாட்கள் ஆகியும் இதுவரை இயக்கவில்லை. இது தொடர்பாக கூடுவாஞ்சேரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டாலும், அலுவலர்கள் அழைப்பை எடுப்பதில்லை. நேரில் சென்று கேட்டாலும் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடந்த மாதம் 26ம் தேதி பழுதான டிவி, மின் மோட்டார் மற்றும் வெற்றிலை பாக்கு, பழங்கள் உள்ளிட்ட தாம்பூலத்துடன் கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்திற்கு திரண்டு சென்றனர்.

அப்போது மின்வாரிய அலுவலகத்தில் யாரும் இல்லாததால், அலுவலகத்தின் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அங்கு வந்த ஊழியர்களிடம் புதிதாக அமைக்கப்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மரை உடனடியாக இயக்கி வைக்க கோரி தாம்பூலத்துடன் மனு கொடுத்தனர். இதனை தொடர்ந்து மக்கள் குடியிருக்கும் பகுதிக்கும் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்ட பகுதிக்கும் இடையே மின்கம்பங்கள் அமைக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு நேற்று காலை புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கப்பட இருந்தது.

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூடுவாஞ்சேரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு திரண்டு வந்து ஊழியர்களை முற்றுகையிட்டு 6 மணி நேரமாக மின் இணைப்பு வழங்கவில்லை, மின் இணைப்பை உடனடியாக வழங்க வேண்டும். இல்லையென்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தவெகவினர் இன்று (நேற்றுமுன்தினம்) இரவு மட்டும் பொறுத்திருங்கள், நாளை (நேற்று) காலையில் எம்எல்ஏ வந்து டிரான்ஸ்பார்மரை திறந்து வைப்பார் என்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அன்புச்செல்வன் புதிதாக அமைக்கப்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மரிலிருந்து பொதுமக்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க அதிரடியாக உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தில் நள்ளிரவு வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.