உத்திரமேரூர், செப்.17: உத்திரமேரூர் அருகே கரும்பாக்கம், பேரணக்காவூர், அரும்புலியூர், பினாயூர், களியப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் ஆண்டுதோறும் அரசு சார்பில் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அறுவடை முடிவடைந்து விவசாயிகள் தங்களது நெற் பயிர்களை நெல் கொள்முதல் நிலையங்கள் நடத்தும் இடங்களில் கொட்டி வைத்துள்ளனர். நெல் கொட்டப்பட்டு ஒரு மாத காலமாகியும் இதுநாள் வரை நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது இரவு நேரங்களில் திடீர் மழை பெய்து வருகிறது.
இதனால் நெற் பயிர்கள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தங்களது நெற்பயிர் உள்ள இடத்தில் நேற்று போராட்டம் நடத்த முற்பட்டனர். தகவல் அறிந்த சாலவாக்கம் போலீசார் மற்றும் துறை அலுவலர்கள் நேரில் சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என கூறியதன்பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


