வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி வெற்றி பயணம் திட்டத்தை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்: குன்றத்தூரில் பரபரப்பு
குன்றத்தூர், அக்.16: தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செல்லலாம் என்று வெற்றிப் பயண திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் மட்டுமல்லாது, பல்வேறு பகுதிகளுக்கும் செல்லக்கூடிய பெண்களும் அரசு பேருந்துகளில் தற்போது இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும், வெற்றிப் பயணம் திட்டத்தை முன்பு இருந்ததுபோல் மாற்றியமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஒருநாள் ஆட்டோக்களை இயக்காமல், நேற்று குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் பதாகைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தமிழக அரசு வெற்றிப் பயண திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், தற்போது அரிசி உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்து இருப்பதால் குடும்பத்தை நடத்துவதற்கு சிரமமாக இருக்கிறது. ஆட்டோக்களில் பயணிகள் யாரும் வராததால் கடனில் எடுக்கப்பட்ட ஆட்டோவிற்கு மாதத் தவணை செலுத்துவதற்கு கூட வழியில்லாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். இதனை தமிழக அரசு பரிசீலனை செய்து, ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். அப்போது, அந்த வழியாக இயக்கப்பட்ட ஆட்டோக்களை ஆட்டோ ஓட்டுநர்கள் இயக்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.
ஒரு நாள் இந்த பகுதியில் ஆட்டோக்கள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.


