Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூடுவாஞ்சேரியில் கோயிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு; ரூ.2.70 கோடி அரசு நிலம் மீட்பு 2 வீடுகள், குடோனுக்கு சீல் வைப்பு: இந்து சமய அறநிலையத்துறை அதிரடி

கூடுவாஞ்சேரி, ஜூன் 16: கூடுவாஞ்சேரியில் உள்ள நந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருந்து கொண்டு இழப்பீடு தொகை செலுத்த தவறியதால் 2 வீடுகள், பந்தல் கடை, குடோனுக்கு இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் ரூ.2.70 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டனர். இதில் ஏராளமான வீடுகள் கட்டி லீஸ் மற்றும் வாடகைக்கு விட்டவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததால் கூடுவாஞ்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

இதில் நகராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு, ஜெய்பீம் நகரில் 325 குடும்பத்தினர் நந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஏராளமானோர் ஆக்கிரமிப்பு செய்து வீடு, கடைகள் ஆகியவற்றைக் கட்டி லீஸ் மற்றும் வாடகைக்கு விட்டு வருவதாகவும், மேலும் இந்து சமய அறநிலைத்துறைக்கு செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகையை சரிவர செலுத்தாமல் ஏமாற்றி வருவதாகவும் இந்து சமய அறநிலை துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் இந்து சமய அறநிலையத்துறையின் செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் ராஜலட்சுமி தலைமையில், தாசில்தார் கவிதா, செயல் அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் வருவாய் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜெய்பீம் நகருக்கு நேற்று வந்து ஆய்வு செய்தனர்.

அப்போது அரசு செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகையை செலுத்தாத 2 வீடு மற்றும் பந்தல் கடை, குடோனுக்கு அதிரடியாக சீல் வைத்தனர். இதில் ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பிலான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். பின்னர் ஒரு சில வீடுகளுக்கு சென்று மீண்டும் ஆய்வு செய்தனர். அப்போது அளவுக்கு மீறி வரிசையாக வீடுகள் கட்டி லீஸ் மற்றும் வாடகைக்கு விட்டது தெரியவந்தது. இதனால் அவர்களை அதிகாரிகள் எச்சரித்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, விரைவில் 325 வீடுகளையும் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனால் கூடுவாஞ்சேரியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.