தாம்பரம் சுற்றுவட்ட பகுதிகளில் கனமழை; முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி
தாம்பரம், அக்.15: தாம்பரம் சுற்றுவட்டப் பகுதிகளில் கனமழை பெய்ததால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், சேலையூர், செம்பாக்கம், சிட்லபாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் நேற்று விட்டு விட்டு கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களுக்கு, நேற்று பெய்த மழை சற்று ஆறுதலை அளித்தது. மழை காரணமாக புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
தொடர்ந்து, பெய்த மழையால் ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் - வேளச்சேரி மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை, முடிச்சூர் சாலை, தாம்பரம் - தர்காஸ் சாலை, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை எம்ஐடி, குரோம்பேட்டை பான்ஸ் உள்ளிaட்ட மேம்பாலங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மழை தீவிரமடைந்ததால், இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலர் பாதுகாப்பு கருதி சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு, மழை குறைந்த பின்னர் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.
இதனிடையே முக்கிய சாலைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில் போதிய அளவில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால், நெரிசலை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.மேலும், பல்வேறு பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். எனவே, மழைக்காலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வாகனப் போக்குவரத்தை சீரமைக்கவும் முக்கிய சாலைகளில் கூடுதல் போக்குவரத்து போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும், குண்டும், குழியுமாக உள்ள சாலைகள், சிறிய மழைக்கே தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலை சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


