செங்கல்பட்டு, அக்.15: கோடை காலம் முடிந்து கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் குறையாமல் இருந்து வந்தது. இந்நிலையில் பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. இதில் திம்மாவரம், ஆத்தூர், வல்லம், மேலமையூர், ஆலப்பாக்கம், பாலூர், புலிப்பாக்கம் பரனூர், மகேந்திராசிட்டி, சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர் ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்தது.
திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் செங்கல்பட்டு நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இருப்பினும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை நிலவியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுராந்தகத்தில் சாரல்
இதேபோல் மதுராந்தகம் சுற்று வட்டார பகுதியில் கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று அதிகாலை முதல் வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான வானிலை நிலவியது. பிற்பகலில் சித்தாமூர் உள்ளிட்ட பகுதியில் கரு மேகங்கள் சூழ்ந்து லேசான சாரல் மழை பெய்தது.


