Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குன்றத்தூர் முருகன் கோயிலில் அன்னதான விரிவாக்க திட்டம் : அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

குன்றத்தூர், அக்.14: குன்றத்தூர் முருகன் கோயிலில் அன்னதான விரிவாக்க திட்டத்தை, அமைச்சர்கள் ரமேஷ், தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் தினம்தோறும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், குன்றத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை 200 பேராக விரிவாக்கம் செய்யும் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு, அன்னதான விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

முன்னதாக, அமைச்சர்கள் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அன்னதான திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி, அவர்களுடன் மதிய உணவு அருந்தினர். பின்னர், அமைச்சர் ரமேஷ், நிருபர்களிடம் கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்புகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும், பட்ஜெட்டில் அறிவித்த அனைத்துப் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் தீவிரமாக நடத்தி முடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரை கண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குணசேகர், சங்கீதா கார்த்திகேயன், ஜெயக்குமார், கோயில் செயல் அலுவலர் பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் கடந்த திமுக ஆட்சிகளில் கொண்டு வரப்பட்டது. அதன், விரிவாக்கப் பணிகளை தற்போது தவெக ஆட்சி மேற்கொண்டு வருகிறது. குன்றத்தூர் முருகன் கோயிலில் தொடங்கி வைக்கப்பட்ட அன்னதான உணவு விரிவாக்க திட்டத்தில் முன்னாள் தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அவரது மகன் சார்பில் கோயிலுக்கு அன்னதானம் வழங்கும் உபயதாரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தவெக அரசு பெயர் மாற்றி விரிவாக்கம் செய்தாலும், நேற்று குன்றத்தூர் முருகன் கோயிலில் திமுக முன்னாள் அமைச்சரின் மகன் உபயதாரராக அன்னதானம் வழங்கிய நிலையில், அதனை தற்போதைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் பெருமாள் கோயில் என காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் அன்னதான திட்டம் விரிவு செய்யப்பட்டுள்ளது.