கிழக்கு கடற்கரை சாலையில் பல்வேறு பகுதிகளில் காரில் வந்து ஆடுகளை திருடிய கும்பல் சுற்றிவளைத்து கைது: விசாரணையில் திடுக்கிடும் தகவல்
திருப்போரூர், அக்.14: சென்னை கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு பகுதியை சேர்ந்த லோகு (38), கணேஷ் (30), பிரபு (42), ஆண்டாள் (75), மீரான் (30), சுரேகா (29) உள்ளிட்ட பலர், வீடுகளில் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக இவர்களது ஆடுகள் தொடர்ந்து திருடுபோயின. இதுகுறித்து கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பைக், ஆட்டோ, காரில் வந்து, பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து ஆடுகளை திருடி சென்றதும், சாலையில் மேய்ச்சலுக்காக சுற்றித்திரியும் ஆடுகளுக்கு, உணவு அளிப்பதுபோல் அருகில் ஆடுகளை வரழைத்து, காரில் கடத்தி சென்றதும் தெரிந்தது.
கார் பதிவு எண்களை வைத்து விசாரித்து, கண்ணகி நகரை சேர்ந்த நாய் மணிகண்டன் (32), கதிரவன் (22) ஆகிய இருவரை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர். அதில், நாய் மணிகண்டன் கடந்த ஆண்டு போதை மாத்திரை விற்ற வழக்கில் சிறை சென்றதும், கதிரவன் இதே காவல் நிலையத்தில் 2 முறை ஆடுகள் திருடிய வழக்கில் சிறை சென்று வந்ததும் தெரிந்தது. இவர்கள், முதலில் பைக்கில் சென்று, எங்கெல்லாம் ஆடுகள் உள்ளது என்பதை நோட்டமிட்டு, பின்னர் கார் எடுத்து சென்று, ஆடுகளை திருடி, கொட்டிவாக்கம் வெங்கடேசபுரத்தை சேர்ந்த மோத்தி பாபு (40) என்ற கறி கடை உரிமையாளரிடம், ஒரு ஆடு ரூ.2 ஆயிரம் வீதம் விற்பனை செய்தது தெரிந்தது.
இதையடுத்து, கறிக்கடை உரிமையாளர் மோத்தி பாபுவையும் போலீசார் கைது செய்தனர். இவர் மீதும் கடந்த 2022ம் ஆண்டு வேதாரண்யம் காவல் நிலையத்தில் ஆடு திருடிய வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இவர்கள், முட்டுக்காடு, கானத்தூர், பனையூர் போன்ற பகுதிகளில் இதுவரை சுமார் 25க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடி விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 15 ஆடுகள் மீட்கப்பட்டன. பின்னர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


