Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீரில் கழிவுநீரும் கலப்பு தொற்று நோய் பரவும் அபாயம்: நிரந்தர தீர்வு காண கோரிக்கை

காஞ்சிபுரம், ஜூலை 14: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 33வது வார்டு சிங்கப்பெருமாள் கோவில் தெரு, பாவாபேட்டை தெரு, தோப்பு தெரு, கோட்ராம்பாளையம் தெரு மற்றும் 35வது வார்டு நாராயணபாளையத் தெரு, ஆலடிப் பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குடிநீரில் கழிவும் நீரும் கலந்து வருகிறது. குடிநீர் குழாயை திறந்து, தண்ணீர் பிடிக்கும்போது மிகவும் கருப்பு நிறமாகவும், துர்நாற்றத்துடன் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 33 மற்றும் 35வது வார்டு பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில், கடந்த சில மாதங்களாக குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து கருப்பாக வருகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட வார்டு பகுதிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததும், உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சரிசெய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு சீரமைக்கப்பட்ட ஒரு வாரத்தில் மீண்டும் குடிநீரில் கழிவுநீர் கலந்து கருப்பு நிறமாக, துர்நாற்றத்துடன் தண்ணீர் வருகிறது. புகார் வந்ததும் தற்காலிகமாகத்தான் சீரமைக்கிறார்களே தவிர, நிரந்தரமாக தீர்வு காண்பதில்லை. எனவே, மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.