Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் சட்டவிரோத தனியார் கிரஷர்களால் 3 கிமீ தூரம் புழுதி பறக்கும் அவலம்

கூடுவாஞ்சேரி, ஜூலை 14: சென்னை அடுத்த வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் இருந்து நல்லம்பாக்கம் செல்லும் பிரதான சாலையில் உள்ள ஊனைமாஞ்சேரி, நல்லம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் 100க்கும் மேற்பட்ட கிரஷர்கள், தார் பிளான்ட்டுகள், கான்கிரீட் பிளான்ட்டுகள் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது என்றும், இதில் புழுதி நிறைந்த சாலையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருவதாகவும், இதனை மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வதே கிடையாது என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

இங்குள்ள 100க்கும் மேற்பட்ட கிரஷர்கள், தார் பிளாண்டுகள், கான்கிரீட் பிளான்ட்டுகள் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. இதில் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் மூடி போடாமலும், தண்ணீர் ஊற்றி அரைக்காமலும் திறந்தவெளியில் சக்கை கற்கள், ஜல்லி கற்கள், எம்சாண்ட் ஆகியவற்றை அரைப்பதால் இதிலிருந்து கரும்புகை மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த புகை வெளியேறுகிறது. இதனால் ஊனைமாஞ்சேரி, கொளப்பாக்கம், நெடுங்குன்றம் நல்லம்பாக்கம், கீரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுவாச கோளாறு மற்றும் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகி கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு காலில் போடும் ஷூ மற்றும் தலையில் அணியும் ஹெல்மெட் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் வேலை வாங்குவதால் தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. இதனால் இயந்திரங்களில் சிக்கி அடிக்கடி உயிர் பலி ஏற்படும் அவல நிலை உள்ளது. மேலும் மேற்படி கிரஷர்களை சுற்றி வனப்பகுதி உள்ளதால் அதில் தூசி படர்வதால் நாளுக்குநாள் காடுகளின் வளர்ச்சியும் குன்றி வருகிறது.

மேலும் இங்கு வந்து செல்லும் லாரிகளின் அட்டகாசத்தால் அப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையும் குண்டும் குழியுமாக மாறியது. பொதுமக்களின் தொடர் போராட்டம் எதிரொலியாக சாலை தற்போது அமைக்கப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலைத்துறை விதிகளின்படி 18 டன்னுக்கு மேல் கனிமங்களை ஏற்றி செல்லக்கூடாது. ஆனால் இங்கு பெரிய பெரிய டாரஸ் லாரிகளில் 60 டன்னுக்குமேல் சக்கை கற்கள், ஜல்லிக்கற்கள், எம்சாண்டு என கனிமங்களை ஏற்றிக்கொண்டு தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட லாரிகள் சென்னை புறநகர் பகுதிகளுக்கு செல்கின்றன.

இதில் லாரிகளின் அட்டகாசத்தால் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையும் நாசமாகி வருகிறது. மேலும் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் தினந்தோறும் அனைத்து துறை அதிகாரிகளும் சென்று வருகின்றனர். ஆனால் இதனை கண்டுகொள்வதே கிடையாது. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்த பிறகு வளர்ந்து வரும் பகுதியாக இப்பகுதி உருவெடுத்துள்ளது. ஆனாலும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோதமாக கிரஷர்கள், தார் பிளான்ட்டுகள், கான்கிரீட் பிளான்ட்டுகள் இயங்கி வருவது பொதுமக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.