Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

டிரான்ஸ்பார்மர் பழுதை சரி செய்தபோது மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி: மின்வாரிய அதிகாரிகள் வராததால் விபரீதம்

மாமல்லபுரம், ஜூலை 13: ஆலத்தூர் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வராததால் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி பழுதை சரி செய்தபோது எலக்ட்ரீஷியன் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியானார். மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் வீரராகவன் (51). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். இந்நிலையில், வடகடம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பங்காரு பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமலும், விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த, 10 நாட்களுக்கு மேலாக குறைந்த மின்னழுத்தம் காரணமாக அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆலத்தூர் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டும் காணாதது போல் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இந்நிலையில், நேற்றும் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆலத்தூர் மின்வாரிய அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டபோது, போனை எடுக்காததாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் நேரில் வராததாலும், வடகடம்பாடி மேட்டுகாலனி பகுதியை சேர்ந்த எலக்ட்ரீஷியனான வீரராகவன் என்பவர் நேற்று மதியம் பங்காரு பேட்டை அருகேயுள்ள டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து விட்டு டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுதை சரி செய்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பலியானார்.

அப்போது, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வராததால், மின் வயரை பிடித்தபடியே அவரது உடல் தொங்கியே கிடந்தது. பின்னர், தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் மற்றும் மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து, வீரராகவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர். பங்காருபேட்டை பகுதியில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதாக ஆலத்தூர் மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் கண்டும் காணாதபோல் அலட்சியமாக செயல்பட்டனர். மேலும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேரில் வராததால்தான் டிரான்ஸ்பார்மர் பழுதை சரி செய்தபோது எலக்ட்ரீஷியன் வீரராகவன் பரிதாபமாக பலியானார். இதில் அலட்சியமாக செயல்பட்ட ஆலத்தூர் மின்வாரிய அதிகாரிகள் மீது கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.