Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாமல்லபுரம் அருகே திரவுபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்: 2 ஆயிரம் பக்தர்கள் குவிந்தனர்

மாமல்லபுரம், ஜூலை 13: மாமல்லபுரம் அருகே திரவுபதி அம்மன் கோயிலில் நடந்த துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியைக் காண 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். மாமல்லபுரம் அடுத்த தெற்குபட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், 557ம் ஆண்டு மகாபாரத சொற்பொழிவு அக்னி வசந்த உற்சவ விழா கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, தினமும் மகாபாரத சொற்பொழிவும், இரவில் தெருக்கூத்து நாடகமும் நடந்து வருகிறது.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி திரவுபதி அம்மன் கோயில் வளாகத்தில் நேற்று நடந்தது. அங்கு, 50 அடி நீளம் கொண்ட துரியோதன், சகுனி மற்றும் சல்லியன் ஆகியோரின் பிரமாண்ட உருவம் மண் சிற்பத்தால் வடிவமைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து, துரியோதனன் - பீமன் இருவரும் ஆயுதங்களை ஏந்தி சண்டையிட்டபடி பீமன் துரியோதனனை துரத்தி வந்து தொடை பகுதியில் ஓங்கி அடித்து துரியோதனனை படுகளத்தில் வதம் செய்த காட்சியை தெருக்கூத்து கலைஞர்கள் தத்ரூபமாக செய்து காட்டினர்.

இதையடுத்து, துரியோதனனின் அம்மாவான காந்தாரி படுகளத்தில் உயிரிழந்த தனது மகனை பார்த்து கூடியிருந்த பக்தர்கள் முன்னிலையில் மகனே இறந்து விட்டாயா? என கண்ணீர் மல்க ஒப்பாரி வைத்து தனது மனக்கவலையை தீர்த்துக் கொண்டார். பிறகு, பீமன் மற்றும் துரியோதனனை அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் தோளில் தூக்கிச் சென்றனர். நிகழ்ச்சியில், தெற்குபட்டு திருவிடந்தை, கோவளம், வட நெம்மேலி, நெம்மேலி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு, திரவுபதி அம்மனை வழிபட்டுச் சென்றனர். நிகழ்ச்சிக்கான, அனைத்து ஏற்பாடுகளையும் தெற்குபட்டு கிராம மக்கள் செய்திருந்தனர். இரவு, தீமிதி வசந்த உற்சவம் சிறப்பாக நடந்தது.