Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காஞ்சியில் 73 நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு அனுமதி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடந்தால் நடவடிக்கை

காஞ்சிபுரம், செப்.11: காஞ்சிபுரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு மற்றும் புகார்கள் எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பி.அமுதா எச்சரிக்கை விடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொர்ணவாரி நடப்பு பருவத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். நெல்மணிகளை விவசாயிகள் விற்பனை செய்ய மாவட்டம் முழுவதும் 73 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், வேடபாளையம் மற்றும் வாலாஜாபாத் வட்டம், வேடல் கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் பி.அமுதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

வேடபாளையம் கொள்முதல் நிலையத்தில் அருகில் உள்ள பென்னலூர் அம்மையப்பநல்லூர், பூந்தண்டலம், காரணிமண்டபம், உத்திரமேரூர் பி ஆகிய கிராமங்களில் இருந்து 125 விவசாயிகள் இதுவரையில் பதிவு செய்து, நெல்மூட்டைகளை கொண்டு வந்துள்ளனர். மையத்தில் சுமார் 42 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. வேடல் கிராமத்தில் சுமார் 25 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுவரையில், 93 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மையத்தில் நெல்லின் ஈரப்பதம் பரிசோதனை செய்வதை பார்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அலுவலர்களிடம் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, நெல்மணிகளை விரைவாக கொள்முதல் செய்யவும், மழை காலங்களில் நெல்மணிகள் நனையாமல் முறையாக மூடி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும், விவசாயிகளுடன் இணைந்து ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எவ்வித முறைகேடும் நடைபெறக் கூடாது. உண்மையான விவசாயிகள் பயன்பெற வேண்டும். நெல் வியாபாரிகள் தலையீடு அறவே கொள்முதல் நிலையங்களில் இருக்க கூடாது. விவசாயிகளிடமிருந்து எவ்வித கட்டணமும் பெறக் கூடாது.

விவசாயிகளின் அடங்கல் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் அலுவலர் கையொப்பம் பெற்ற பின்னரே கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். இதில் தவறு நிகழக் கூடாது. வருவாய்த்துறையினர், வேளாண்மை துறையினர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் இதனை முறையாக கண்காணித்து தவறு இல்லாத வகையில் செயல்படுவதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.

இதில் புகார்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பி.அமுதா, கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா, காஞ்சிபுரம் சப் கலெக்டர் புவனேஷ் ராம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் (பொ) முருகானந்தம், வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஆதார விலை- ஊக்கத்தொகை

நெல் ரகம்: ஒன்றிய அரசின் அடிப்படை ஆதார விலை (குவிண்டால் ஒன்றுக்கு), ரூ.2,461, தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.289 என மொத்தம் ரூ.2,750மும், சன்ன ரகம்: ரூ.2,461 மற்றும் ரூ.289 என மொத்தம் ரூ.2,750மும், பொது ரகம்: ரூ.2,441 மற்றும் ரூ.159 என மொத்தம் ரூ.2,600மும் வழங்கப்படுகிறது