திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், தையூர், கொண்டங்கி, பொன்விளைந்த களத்தூர், சிறுதாவூர் ஆகிய இடங்களில் பெரிய அளவிலான ஏரிகள் உள்ளன. இவற்றில் கொண்டங்கி ஏரி திருப்போரூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் இருந்து கொண்டங்கி, நல்லம்பாக்கம், மேலையூர், கீழூர், அகரம், நெல்லிக்குப்பம், கொட்டமேடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன.
அதுமட்டுமின்றி இப்பகுதியின் மிக முக்கியமான நிலத்தடி நீராதாரமாக கொண்டங்கி ஏரி விளங்குகிறது. இந்நிலையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் இந்த ஏரிக்கு நீர் வந்து சேரும் நீர் வரத்துக் கால்வாய்கள் தூர் வாரப்பட்டன. தற்போது ஏரியில் இருந்து பல்வேறு கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் பாசன வாய்க்கால்களை தூர் வார வேண்டும் என்று கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதையடுத்து நீர்வளத்துறை சார்பில் கொண்டங்கி ஏரியில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பாசன வாய்க்கால்களை தூர் வாரும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. முதற்கட்டமாக கொட்டமேடு, மயிலை கிராமங்களில் பாசன வாய்க்கால்களில் இருந்த சீமைக் கருவேல மரங்கள், புதர்கள் போன்றவை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. இப்பணி வரும் 20ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் என மாவட்ட நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட நீர்வளத்துறை நிர்வாகம் இப்பணியை தினந்தோறும் கண்காணித்து அனைத்து கிராமங்களுக்கும் ஏரி நீர் செல்லும் வகையில் எல்லா பாசன வாய்க்கால்களையும் தூர் வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


