காஞ்சிபுரம், அக்.10: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம் இன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை காஞ்சிபுரம் வட்டத்தில் திருப்புட்குழி, உத்திரமேரூர் வட்டத்தில் கருவேப்பம்பூண்டி, வாலாஜாபாத் வட்டத்தில் தேவரியம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் பி பிளாக், செல்லப்பெருமாள் நகர், குன்றத்தூர் வட்டத்தில் நந்தம்பாக்கம் -பெரியார் நகர் ஆகிய கிராமங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன.
மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள், தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை நியாயவிலைக் கடைக்கு பொருள் பெற நேரில் செல்ல இயலாத முதியோர், மாற்றுத்திறனாளிகள் அங்கீகாரச்சான்று பெறுவதற்கான மனுக்களை அளிக்கலாம். மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும்.
மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதேனும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம். இந்த, அரிய வாய்ப்பினை மேற்படி கிராம மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.


