Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

முதல்முறையாக இடைத்தேர்தலை சந்திக்க இருக்கும் மதுராந்தகம் தொகுதியில் வெல்லப்போவது யார்?: களைகட்டும் தேர்தல் களம்

மதுராந்தகம், செப்.10: சட்டமன்ற தொகுதியாக உருவெடுத்த பின் முதல்முறையாக இடைத்தேர்தலை சந்திக்க இருக்கிறது மதுராந்தகம் தொகுதி. இந்த இடைத்தேர்தலில் யார் வெல்லப்போவது என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடையே எழுந்துள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் களம் களைகட்ட தொடங்கியுள்ளது. அதிமுக, திமுகவின் கோட்டையாக இருந்துவந்த மதுராந்தகத்தில் இந்தமுறை ஆளும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக கால் பதிக்குமா என்ற கேள்வி தொகுதி மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது. மேலும் அதிமுக தன் செல்வாக்கை தக்கவைக்குமா என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மதுராந்தகம் தனி தொகுதியில் திராவிடக் கட்சிகள் எத்தனை முறை வெற்றிக் கொடியை நாட்டியுள்ளன என்ற விவரத்தை விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டிற்கு சென்னை மாகாணம் என பெயர் இருந்த காலகட்டமான 1951ம் ஆண்டில் சட்டமன்ற தொகுதியாக உருவெடுத்தது மதுராந்தகம். அப்போது 1952ல் நடத்தப்பட்ட சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. தொடர்ந்து அடுத்த இருமுறையும் அதாவது 1957 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸே வென்றது. பின் அடுத்த மூன்று முறை நடந்த தேர்தல்களில் மதுராந்தகம் தொகுதி திமுக வசம் சென்றது. பின்னர் 1967, 71, 77 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக திமுகவே வெற்றிக் கொடி நாட்டியது.

இதனையடுத்து 1980ல் முதல்முறையாக மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வெற்றிக் கனியை பறித்தது. பின் 1984ல் திமுக வென்றது. முதல் வெற்றிக்குப் பின் அடுத்த தேர்தலில் வாய்ப்பை தவறவிட்ட அதிமுக, 1989ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தொடங்கி 1991 தேர்தலிலும் வெற்றியை தன்வசப்படுத்தியது. பின் மீண்டும் 1996ல் திமுகவும், 2001ல் அதிமுகவும் மாறி மாறி வென்றன.

1962ம் ஆண்டு மதுராந்தகம் தொகுதியில் வாய்ப்பை இழந்த காங்கிரஸ் கட்சி 2006ம் ஆண்டு மீண்டும் அங்கு வென்றது. ஆனால் அடுத்த முறை 2011ல் தேர்தல் நடந்தபோது காங்கிரசால் வெல்ல முடியவில்லை. 2011 தேர்தலில் அதிமுகவும், 2016ல் திமுகவும் மதுராந்தகத்தில் மாறி மாறி ஆட்சி புரிந்தன. அதன் பின் கடந்த இருமுறை நடந்த தேர்தல்கள், அதாவது 2021 மற்றும் 2026 ஆகிய தேர்தல்களிலும், மதுராந்தகம் தொகுதியில் அதிமுகவே வென்றது. 2021 தேர்தலின்போது 86,646 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற மரகதம் குமரவேல், 2026ல் 69,284 வாக்குகளைப் பெற்று வெற்றிக் கனியைப் பறித்தார். 2021ல் 83,076 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்த திமுக, கடந்த முறை நடந்த தேர்தலில் 59,838 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. 2021ல் 9,293 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்திருந்த நாதக, நடந்துமுடிந்த தேர்தலில் வெறும் 4,950 வாக்குகளை மட்டுமே பெற்றது. 2026 தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட தவெகவின் எழில் கேத்தரின் எழில்மலை மதுராந்தகம் தொகுதியில் 62,090 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தார்.

இப்படி 4 முறை காங்கிரசும், 6 முறை திமுகவும், 7 முறை அதிமுக வென்ற மதுராந்தகம் தொகுதியில், வரக்கூடிய இடைத்தேர்தலில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆட்சியை பறிகொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் திமுக, 3ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தவெக என இந்த தேர்தல், மும்முனை போட்டியாக கொஞ்சம் பரபரப்பாக இருக்கும் என்றே சொல்லலாம்.

தற்போது மதுராந்தகம் தொகுதியைப் பொறுத்தவரை 1 லட்சத்து 7,288 பெண் வாக்காளர்களும், 1 லட்சத்து 3,943 ஆண் வாக்காளர்களும், 64 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 295 பேர் உள்ளனர். திமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக முன்னிறுத்தும் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

இன்று திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஐ.பரந்தாமன் அறிமுகக் கூட்டம் மதுராந்தகம் ஆர்.ஏ.ஆர்.திருமணமண்டபத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடக்கிறது. இதில், மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமை தாங்குகிறார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்டக் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் அணிகளின் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், மாவட்டப் பிரதிநிதிகள், வார்டு கிளைச் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி மாவட்ட செயலாளர் சுந்தர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தவெக சார்பில் மரகதம் நிற்பாரா?

நடந்து முடிந்த தேர்தலுக்குப் பின் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியம் ஆன மரகதம் குமரவேல் கடந்த இரு தேர்தல்களிலும் மதுராந்தகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கும் நிலையில், அவருக்கு தவெக தரப்பில் வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல், திமுக வேட்பாளராக நேற்று ஐ.பரந்தாமன் அறிவிக்கப்பட்டுள்ளார்.