கூடுவாஞ்சேரி, செப்.10: நெல்லிக்குப்பம் சாலையில் பைக் மீது லாரி மோதியதில் டெய்லர் பரிதாபமாக பலியானார். இதில் நஷ்டஈடு கேட்டு குடும்பத்தினர் தர்ணா போராட்டம் நடத்தியதால் கூடுவாஞ்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது. குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் (50), டெய்லரான இவருக்கு காஞ்சனா (38) என்ற மனைவியும், விஜய் (18), யுவன்சங்கர் (12) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். குணசேகரன் கூடுவாஞ்சேரி மற்றும் காயரம்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள டெய்லர் கடையில் டெய்லராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை காயரம்பேட்டில் உள்ள கடைக்கு சென்று வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு, மாலை கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் சாலையில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, எதிரே மொபட்டில் வந்த பெண், குணசேகரன் பைக் மீது மோதினார். இதில், நிலைதடுமாறி சாலையில் விழுந்த குணசேகரன் மீது, கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வந்த லாரி ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் புதுச்சேரியைச் சேர்ந்த லாரி டிரைவர் முத்துக்குமார் (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் விபத்துக்கு காரணமான இளம்பெண்ணை போலீசார், தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், லாரி உரிமையாளரிடம் நஷ்ட ஈடு கேட்டு குணசேகரனின் மனைவி காஞ்சனா மற்றும் உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, கூடுவாஞ்சேரியில் உள்ள போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் அலுவலகத்தின் நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது குணசேகரன் உடலை அடக்கம் செய்ய ஒரு லட்ச ரூபாய் தர வேண்டும் என்று வலியுறுத்தி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார், அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதும் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கூடுவாஞ்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


