காஞ்சிபுரம் அருகே சோகம் பிரசவ நேரத்தில் கடனை திருப்பி தரக்கோரி தகராறு: தார்ப்பாய் கூடாரத்தில் பிரசவம் குழந்தையுடன் பெண் உயிரிழப்பு
காஞ்சிபுரம், செப்.10: காஞ்சிபுரம் அருகே பிரசவ நேரத்தில் கடனை திருப்பி தருமாறு விறகு வியாபாரி தகராறு செய்ததையடுத்து, தார்ப்பாய் கூடாரத்தில் பிரசவம் பார்த்ததில் இருளர் இனத்தைச் சேர்ந்த பெண், குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விறகு வியாபாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேன்மொழி (35). இருளர் இன சமூகத்தை சேர்ந்த இவரது கணவர் ஆனந்தன் (40). இந்த, தம்பதி அரக்கோணம் சாலையில் உள்ள தாமரை தாங்கல், குளக்கரை பகுதியில் வேலிக்கத்தான் மரம் வெட்டும் வேலை செய்து வந்தனர். இவர்கள், விறகு வியாபாரி ஆறுமுகத்தின் தார்ப்பாய் கூடாரத்தில் தங்கி, 6 மாதங்கள் வேலை செய்வதற்கு, ரூ.20 ஆயிரம் முன்பணம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 9 மாத கர்ப்பிணியான தேன்மொழிக்கு நேற்று முன்தினம் இரவு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, முன்பணமாக பெற்ற கடனை திருப்பி செலுத்தாமல் வேலையை விட்டு செல்லக்கூடாது எனக்கூறி வியாபாரி ஆறுமுகம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல், ஆறுமுகத்தின் தார்ப்பாய் கூடாரத்திலேயே தேன்மொழிக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதனையடுத்து, குழந்தையின் உடலில் பாதி மட்டும் வெளியே வந்துள்ளது. அப்போது தேன்மொழி வலியில் துடித்துள்ளார். பின்னர் வலியில் கதறிய தேன்மொழி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில் துரதிர்ஷ்டவசமாக பிறந்த குழந்தையும் உயிரிழந்தது. பின்னர் இந்த சம்பவத்தை இயற்கை மரணம் எனக்கூறி விறகு வியாபாரி ஆறுமுகம் ரூ.2 ஆயிரம் வழங்கி, தேன்மொழியின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தேன்மொழி உயிரிழந்த சம்பவம் அறிந்து வந்த அவரது உறவினர்கள், மரக்கிடங்கு உரிமையாளர் ஆறுமுகம் வாங்கியுள்ள கடனை காட்டி தேன் மொழியையும், அவரது கணவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவில்லை என குற்றம் சாட்டி பொன்னேரி கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் மரக்கடை உரிமையாளரிடமும், உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் ஆனந்தனிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் கணவர் ஆனந்தன் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது மரக்கடை உரிமையாளரை தனது செல்போன் மூலம் பலமுறை தொடர்புகொள்ள முயன்றதாகவும், அவர் எடுக்காத நிலையில் நீண்ட நேரம் கழித்து அங்கு வந்த பின்னர்தான் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து, தானும் தனது குடும்பத்தினரும் கொத்தடிமை தொழிலாளர்களாக வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறி ஆனந்தன் தனியாக புகார் அளித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிப்பதற்காக, புகார் சப் கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை மற்றும் சப் கலெக்டரின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரசவ வலியின்போது வேலையை விட்டு செல்லக்கூடாது எனக்கூறி விறகு வியாபாரி தகராறு செய்ததில், தாய் மற்றும் சேய் இருவரும் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


