Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம் முழுவதும் ஒரே நாளில் 126க்கும் மேற்பட்ட இடங்களில் மின்தடை: பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதி

காஞ்சிபுரம், அக்.9: தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் இன்றைய மின்தடை, நாளைய மின்தடை என்று அறிவிப்பார்கள். இதில் ஒரு பகுதியில் இன்றைக்கு, மற்றொரு பகுதியில் நாளைக்கு என்று மின்தடை அறிவிக்கப்படும். ஆனால் நேற்று ஒரே நேரத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள ஓரிக்கை, தொழிற்பேட்டை உள்பட சுமார் 126 பகுதிகள் மற்றும் நகரத்தை ஒட்டிய கிராமப் பகுதிகள் என பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு, மின்சார பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், காஞ்சிபுரம் முழுவதும் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ - மாணவிகள், வியாபாரிகள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

காலையிலிருந்து முக்கிய பகுதிகளில் அதாவது காமாட்சி அம்மன் அவென்யூ, பல்லவன் நகர், செவிலிமேடு, ரங்கசாமி குளம், தாயார் அம்மன் குளம், அதேபோல கிராமங்களான மருதம் சிப்காட் தொழிற்பேட்டை, கட்டவாக்கம், தேவரியம்பாக்கம், அதிக நெசவாளர்கள் அதிகம் வாழும் பிள்ளையார்பாளையம், கைலாசநாதர் கோயில் தெரு, புதுப்பாளைய தெரு, திருப்பருத்திகுன்றம் மற்றும் கரிக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு, சாலபோகம் நீரேற்று நிலையம், வியாபாரிகள், வர்த்தகர்கள், நிறுவனங்கள் உள்ள பகுதிகளான வணிகர் வீதி, ரயில்வே ரோடு, ராஜாஜி மார்க்கெட், காந்தி ரோடு, ரெட்டிபேட்டை சேக்பேட் நடுத்தெரு, கவரைத் தெரு, எண்ணைக்கார தெரு, ஆனந்தாபேட்டை, நெல்லுக்கார தெரு, அறம் பெரும் செல்வி தெரு, வைகுண்ட பெருமாள் கோயில் தெரு, சின்ன காஞ்சிபுரம் பெரியார் நகர், டோல்கேட், சதாவரம், முத்தியால்பேட்டை, அய்யம்பேட்டை, களக்காட்டூர் உள்ளிட்ட பகுதி மக்களின் அத்தியாவசிய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

காலையில் சிறுவர் மற்றும் குழந்தைகள் (கிண்டர் கார்டன்) பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் மதிய உணவு வழங்க முடியாமல் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பெரும்பாலும் ஓட்டல்கள் மூலம் வாங்கி குழந்தைகளுக்கு உணவை வழங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். இதேபோல் அரசு பள்ளிகளில் மின்சாரம் தடைபட்டதால் பள்ளிக்கு வெளியில் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் நிலமை ஏற்பட்டது. காந்தி ரோடு, காமராஜர் வீதியில் உள்ள பட்டுக்கடைகள் ஜெனரேட்டர் மற்றும் இன்வெட்டர் மூலம் இயங்கினாலும் நீண்ட நேரம் அது தாக்குபிடிக்காமல் திணறின. பல சரக்கு கடைகள், மளிகை கடைகள் மற்றும் ஓட்டல்களிலும் இதுபோன்ற மின்தடையால் வாடிக்கையாளர்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.

விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாது ஷாக் அடிக்கும் அளவில் மின்சார கட்டணமும் உயர்ந்திருக்கிறது. ஏற்கனவே அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதிப்படும் நிலையில், இப்போது அறிவிக்கப்பட்ட மின் தடையாலும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காலை 9 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் மாலை 4 மணிக்குதான் வந்தது. இதில் திடீரென மதியம் பெய்த மழையால் புழுக்கத்தில் இருந்த பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

இ-சேவை மையங்கள் முடங்கின

காஞ்சிபுரத்தில் மின்தடை அறிவிப்பு குறித்து, தகவல் அறியாத பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இ.சேவை மையங்களில் வந்து ரேஷன் கார்டில் பெயர் மற்றும் முகவரி மாற்றம், ஆதார் கார்டில் பெயர், முகவரி மாற்றம், ஜாதி மற்றும் இருப்பிட சான்றிதழ்கள் என பல்வேறு பணிகளுக்காக குழந்தை குட்டிகளுடன் காத்திருந்தனர். ஆனால் காலையிலிருந்து மதியம் வரை மின்சாரம் வந்து விடும் என்று காத்திருந்தவர்கள், மாலை 4 மணி வரை வராததால், நீண்ட நீண்ட பெருமூச்சு விட்டனர். இனி வரும் காலங்களில் மொத்தமாக முக்கிய பகுதிகள், பொதுமக்கள் அதிகமாக வாழும் பகுதிகள், வர்த்தக நிறுவனங்கள், பட்டுக்கடைகள் உள்ள பகுதிகளில் மின்தடை அறிவிப்பதை தமிழ்நாடு மின்சார வாரியம் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.