Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நவராத்திரியை முன்னிட்டு செங்கல்பட்டில் 10 நாள் தசரா விழா: கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது

செங்கல்பட்டு, அக்.9: செங்கல்பட்டு நகரில் ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி 10 நாட்கள் தசரா விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 130ம் ஆண்டு தசரா விழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. இதற்காக சின்னக் கடை வீதியில் ராட்சத ராட்டிணங்கள், பொழுதுபோக்கு சாதனங்கள், பல்வேறு விதமான உணவு கூடங்கள், விளையாட்டு பொருட்கள், கடைகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. நாளை சின்ன கடை வீதியில் இருந்து ஊர்வலமாக சென்று செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை அருகே உள்ள சின்ன முத்து மாரியம்மன் குளக்கரையிலிருந்து கங்கை திரட்டி அம்மன் மேளதாளங்களுடன் அம்மனுக்கு கொடியேற்றி சிறப்பு அலங்காரம் செய்து நவராத்திரி தசரா விழா தொடங்கப்படவுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 9 நாட்கள் நாள்தோறும் மாலை நேரங்களில் சின்ன கடைவீதி ஓசுர அம்மன், சின்னமுத்து மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களில் தினம் ஒரு அலங்காரம் செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டு பக்தர்கள் சிறப்பு அலங்காரம் செய்வர். 19ம் தேதி இரவு அனைத்து அம்மன்களும் முக்கிய வீதிகளில் செங்கல்பட்டில் ஊர்வலமாக சென்று அனைத்து தேர்களும் சின்ன கடை வீதியில் அணிவகுத்து நிற்கும். அப்போது மகிசாசுரம் வேடம் அணிந்து வன்னி மரத்தில் அம்பு எழுதும் நிகழ்ச்சி நடைபெறும். இதனைக் காண செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து தரிசனம் செய்வார்கள். தினந்தோறும் கடைகள், ராட்டிணங்கள், பொழுதுபோக்கு சாதனங்கள் இரவு 11 மணி வரை இயங்குவதால் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என ஏராளமானார் வந்து பார்வையிடுவார்கள்.

இந்த 10 நாள் தசரா விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு எஸ்.பி‌. ஐமன் ஜமால் தலைமையில் செங்கல்பட்டு டிஎஸ்பி வீரக்குமார் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள், பாதுகாப்பு வசதிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் தீயணைப்பு துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். மைசூர், குலசேகரப்பட்டினம் போன்ற தசரா விழாக்களுக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு தசரா மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.