Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

குன்றத்தூர் மலைப்பட்டு ஊராட்சியில் அரசு நிலம் பிளாட் போட்டு விற்பனை: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ஸ்ரீபெரும்புதூர், அக்.9: குன்றத்தூர் ஒன்றியம் மலைப்பட்டு ஊராட்சியில், ஸ்ரீபெரும்புதூர்-மணிமங்கலம் சாலையை ஒட்டி சுமார் 5 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மலைப்பட்டு ஊராட்சியில் சாலையை ஒட்டி சுமார் 5 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. மலைப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கடந்த பல ஆண்டுகளாக இந்த இடத்தினை விளையாட்டு திடலாக பயன்படுத்தி வந்தனர். தற்போது இதே பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் சிலர் முள்வேலி அமைத்து மரக்கன்றுகள் நட்டு வைத்துள்ளனர். மேலும் ஒரு சிலர் நிலத்தை பணம் கொடுத்து வாங்கி வீடுகள் கட்டி வருகின்றனர்.

ஒரு சென்ட் நிலம் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையில் விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து பல முறை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்க்கு, அரசு நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர் அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பதால் நிலத்தினை மீட்க முடியாமல் உள்ளது என்றனர். நில அபகரிப்பு புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் தவெக அரசு, அரசியல் பிரமுகர்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்களுக்கு அரசு மீது நம்பிக்கை வரும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் தனிப்பிரிவில் புகாரளித்தும் பலனில்லை

மலைப்பட்டு பகுதியில் சாலையை ஒட்டி உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வீட்டுமனையாக பிரித்து விற்பனை செய்வதாகவும், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் முதல்வரின் தனி பிரிவிற்கு மனு கொடுத்துள்ளனர். புகார் கொடுத்து 2 மாதங்கள் ஆகியும் இதுவரை அந்த மனுவிற்கு பதில் கிடைக்கவில்லை, அந்த புகார் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தவெகவினர் வாக்குறுதி அளித்தனர். ஆனால் இரண்டு மாதமாகியும் இதுவரை அந்த மனுவிற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.