மதுராந்தகம், செப்.9: மதுராந்தகம் சட்டமன்றத் தனி தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களாக காலியாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்திய தேர்தல் ஆணையம் அக்டோபர் 6ம் தேதி மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அந்த தொகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து மதுராந்தகம் நகராட்சி ஆணையர் சுகேந்திரன் தலைமையில் ஹாஸ்பிடல் ரோடு, உக்கன்சந்த் சாலை, தேரடி தெரு ஆகிய நகரின் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி பேனர்கள் அகற்றப்பட்டன. பேருந்து நிலையம், சூனாம்பேடு சாலை, மேம்பாலம் புறவழிச் சாலையில் உள்ள மேம்பாலம் ஆகியவற்றில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன.
மேலும் பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை, அண்ணா சிலை உள்ளிட்ட தலைவர்கள் சிலையை துணியை கொண்டு மறைக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் மும்மரமாக ஈடுபட்டனர். மதுராந்தகம் நகர்மன்ற தலைவர் மலர்விழி குமார், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்ணன், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன் ஆகியோர் தங்கள் வாகனங்களை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் இவர்கள் பயன்படுத்திய அலுவலக அறைகள் மற்ரும் அச்சிறுப்பாக்கம், கருங்குழி ஆகிய பேரூராட்சித் தலைவர்களின் அறைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.


