விதிமீறல் தொடர்பான புகார் எண்கள் அறிவிப்பு மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் இன்று வேட்பு மனு தொடங்குகிறது: 9 பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு அமைப்பு
மதுராந்தகம்: மதுராந்தகம் இடைதேர்தலை முன்னிட்டு இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. மேலும், இதற்காக 9 பறக்கும் படை மற்றும் 9 நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மனு தாக்கலுக்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் வீரப்பன் நேற்று ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலராக மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் நரேந்திரன், மதுராந்தகம் வட்டாட்சியர் பெருமாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் இம்மாதம் 9ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெறுகிறது. மதுராந்தகம் சட்டமன்ற தனி தொகுதியில் இடைத் தேர்தல் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ம் தேதி நடைபெறுகிறது.
இடைத்தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் இன்று காலை 9 மணி முதல் தொடங்குகிறது. வேட்பு மனு தொடங்கப்பட உள்ளதால், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை, வேட்பு மனு செய்யும் இடத்தில் இருந்து 100 மீட்டர் முன்னதாகவே தடுத்து நிறுத்தும் வகையில் கோடுகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், மனு தாக்கலுக்கான முன்னேற்பாடு பணிகளை செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் நேற்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகம் சென்று தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 1,04,886 ஆண் வாக்காளர்கள், 1,08,738 பெண் வாக்காளர்கள் மற்றும் 65 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2,13,689 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் . நேற்று முன் தினம் முதலே மதுராந்தகம் தொகுதியில் நடத்தை விதிகள் அமலானது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 9 பறக்கும் படைகள், 9 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வீடியோ கேமராமேனுடன் வாகனங்களும் நேற்று முதல் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரசார கூட்டங்கள் நடத்துதல், ஒலிபெருக்கி பயன்படுத்துதல், வாகனங்கள், ஊர்வலங்கள், தற்காலிக கட்சி அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் SUVIDHA செயலி மூலம் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் C-Vigil செயலி மற்றும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவும் தெரிவிக்கலாம். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க 1950, 1800-425-7088, 044-27427412 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


