Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மனிதர்களுக்கு செய்வதுபோல் சடங்கு செய்து அடக்கம்; லண்டனிலிருந்து வந்து நாய்க்கு அஞ்சலி செலுத்திய இளைஞர்: காஞ்சிபுரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

காஞ்சிபுரம், அக்.8: காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை, இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிராஜ் - ஞானசவுந்தரி தம்பதி. கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பழனிராஜின் மகன் லோகேஷ், லண்டனில் பணிபுரிந்துகொண்டு, மேல்படிப்பும் படித்து வருகிறார். இவர்களது வீட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உயர்ரக நாய் குட்டி ஒன்றை ‘வீரூ’ என பெயரிட்டு செல்லப் பிராணியாக வளர்த்து வந்துள்ளனர். லோகேஷூம், செல்ல நாயும் அண்ணன் தம்பி போலவே அதிக பாசத்தோடு இருந்துள்ளனர். லோகேஷ், மேல் படிப்பிற்காக லண்டன் சென்று விட்ட நிலையில், பழனி ராஜ் - ஞானசௌந்தரி தம்பதி செல்ல நாய் வீரூவுடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட செல்ல நாய் வீரூவுக்கு, சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அது பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான பழனி, செல்ல நாய் உயிரிழந்த சம்பவம் குறித்து லண்டனில் உள்ள தனது மகன் லோகேஷுக்கு தகவல் தெரிவித்தார். செய்தி கேட்டு கதறி அழுத லோகேஷ், உடனடியாக, லண்டனில் இருந்து காஞ்சிபுரம் புறப்பட்டு வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, உடனடியாக டிக்கெட் எடுத்துக்கொண்டு விமானம் மூலம் நேற்று காலை சென்னை வந்த லோகேஷ், பின்னர் காஞ்சிபுரத்திற்கு சென்றுள்ளார்.

பழனிராஜ் குடும்பத்தினர், தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவர் உயிரிழந்ததைப்போல செல்ல நாயின் உடலை ப்ரீசர் பாக்ஸில் வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். லண்டனில் இருந்து வந்த லோகேஷூம், தான் வளர்த்த செல்ல நாய் உயிரிழந்ததற்கு கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்திய சம்பவம் பார்த்தவர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. தொடர்ந்து, மனிதர்களுக்கு செய்வது போலவே அனைத்து சடங்குகளும் செய்து, செல்ல நாய் வீரூவின் உடலை நல்லடக்கம் செய்தனர்.

குடும்பத்தில் உள்ள நபர்கள் இறந்தாலே, வெளி நாடுகளில் உள்ளவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவதற்கு அலட்சியம் காட்டும் நிலையில், தான் வளர்த்த செல்ல நாய்க்காக பல்வேறு சிரமங்கள் இருந்தாலும், அதனை பொருட்படுத்தாமல் லண்டனில் இருந்து வந்து அஞ்சலி செலுத்திய இளைஞரின் செயல் காஞ்சிபுரம் பகுதி மக்களிடையே பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.