இடைதேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி; மதுராந்தகம் தொகுதியில் நடத்தை விதி அமலானது: அரசியல் கட்சி பிரமுகர்களிடையே பரபரப்பு
மதுராந்தகம், செப்.8: மதுராந்தகத்தில் அக்டோபர் 6ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் சட்டமன்றத் தனித் தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 103943, பெண் வாக்காளர்கள் 107288, மூன்றாம் பாலினத்தினர் 64 என மொத்த வாக்காளர்கள் 2,11,295 உள்ளனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் அமுலு பொன்மலர், அதிமுக சார்பில் மரகதம் குமரவேல், தவெக கட்சி சார்பில் எழில் கேத்தரின் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். இதனிடையே தமிழ்நாட்டில் தவெக கட்சி ஆட்சியைப் பிடித்தது.
இதில், அதிமுக கட்சியில் இருந்து மரகதம் குமரவேல் விலகினார். மேலும், தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால் மதுராந்தகம் தொகுதியில் பெரும் சலசலப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து தவெக கட்சியில் இணைந்தார். தேர்தல் ஆணையம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டது. தேர்தலுக்கு தனி அலுவலரையும் நியமித்தது. இடைத்தேர்தல் நடைபெறும் என்பதால் திமுக சார்பில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமையில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பூத் வாரியாக சென்று ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார்.
இந்நிலையில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 6ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்தது. இடைத்தேர்தல் தேதி அறிவிப்பை கேட்டதும் அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் மத்தியில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் யார் வேட்பாளராக நிற்பார்கள் என்ற சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.


