குன்றத்தூர், செப்.8: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில் இருந்து, தற்போது 5,175 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை மற்றும் மிதமான மழை விட்டுவிட்டு பெய்து வருகின்றன. இவ்வாறு பெய்து வரும் மழையின் காரணமான, நேற்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 1,338 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலம், கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 230 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டுள்ளது. இதில், சென்னை மக்களின் குடிநீருக்காக இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 250 கன அடி வீதமும், பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 15 கன அடி வீதமும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
* செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 1647 மில்லியன் கன அடியாக தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 கன அடியாக உள்ளது. சென்னை மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 183 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
* புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 1774 மில்லியன் கன அடியாகவும் தண்ணீர் இருப்பு உள்ளது. இந்நிலையில், ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 507 கன அடியாக உள்ளது. சென்னை மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 172 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
* சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது 135 மில்லியன் கன அடியாகவும் தண்ணீர் இருப்பு உள்ளது. இந்நிலையில், ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 80 கன அடியாக உள்ளது.
* கண்ணன்கோட்டை ஏரியின் 36.61 அடி மொத்த உயரத்தில் 29.59 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 281 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 கன அடியாக உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 2 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் இந்த 5 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில் தற்போது 5,175 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


