காஞ்சிபுரம், செப்.8: 108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், ஆவணி மாதம் கிருஷ்ண பட்ச ஏகாதசியையொட்டி திருவடி கோயில் புறப்பாடு உற்சவம் நேற்று நடைபெற்றது. திருவடிகோயில் புறப்பாடு உற்சவத்தை முன்னிட்டு அத்திகிரி மலைமீது இருந்து இறங்கிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. ஆரஞ்சு நிற பட்டுடுத்தி, தங்க, திருவாபரணங்கள், மல்லிகைப்பூ, மனோரஞ்சித பூ, கனகாம்பரம் பூ, விருட்சிப் பூ, மலர் மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு பெருமாள் காட்சி அளித்தார்.
பின்னர் மேளதாளங்கள் முழங்க, திவ்ய பிரபந்தம், வேத பாராயண கோஷ்டியினர் பாடிவர தேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் சன்னதி தெருவில் வீதியுலா வந்து, திருவடி கோயிலுக்கு எழுந்தருளி சேவை சாதித்து பின்னர் கோயிலுக்கு திரும்பினார். தேவி, பூதேவியுடன், திருவடி கோயிலுக்கு எழுந்தருளிய வரதராஜ பெருமாளை திரளான பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.


