Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

சென்னை புறநகரில் தொடரும் ஏடிஎம் கொள்ளைகள் குற்றவாளிகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: அன்புமணி கண்டனம்

ஸ்ரீபெரும்புதூர், செப்.7: பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஏடிஎம் ஒன்றை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொள்ளையர்கள் உடைத்து, அதில் இருந்த ரூ.11.50 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதன் பரபரப்பு அடங்குவதற்குள் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சோமங்கலம் பகுதியில் மற்றொரு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே கூடப்பாக்கத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தையே கொள்ளையர்கள் முழுமையாக தூக்கிச் சென்றுள்ளனர். இந்த 3 ஏடிஎம் கொள்ளைகளையும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் நடத்தியதாக கூறப்படுகிறது.

2வது ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய கும்பலை கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி தெலங்கானா-மராட்டிய எல்லையில் சிறப்புப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றபோது, அந்த கும்பல் தப்பி அரியானாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 2 ஏடிஎம் கொள்ளைகள் நடைபெற்ற நிலையில், ஏடிஎம்கள் மீதான கண்காணிப்பை காவல்துறை ஏன் வலுப்படுத்தவில்லை? 3வது ஏடிஎம் கொள்ளையை நடத்தியவர்கள் யார் என்பது குறித்து காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். மறுபுறம் சென்னை பெசன்ட் நகரில் தவெக நிர்வாகி கண்ணன் என்பவர் ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவமும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கூறப்படும் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கேள்வி எழுப்புகிறது. வடமாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் தமிழ்நாட்டுக்குள் வந்து ஏடிஎம் கொள்ளைகளில் ஈடுபடுவதும், கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதும் ஆட்சியின் தோல்வியாகவே கருதப்படும்.

எனவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க காவல்துறையின் கண்காணிப்பையும், உளவுத்துறையின் செயல்பாடுகளையும் தமிழக அரசு உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி, தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கும்பல்களை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.