திருக்கழுக்குன்றம், செப்.7: வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வளத்துறை சார்பில் முட்டுக்காடு கடல் பகுதியில் உள்ள மணல் குவியல் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டு முகத்துவாரம் திறக்கப்பட்டது. வட கிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால் கடலோர பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் தமிழக அரசு வெள்ள தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நீர்வளத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம், முட்டுக்காடு, வெட்டுவாங்கேணி, உத்தண்டி, கானத்தூர், கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் பக்கிங்காம் கால்வாய் கடந்து செல்கிறது.
மழைக்காலங்களில் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து பாதிப்புகள் ஏற்படாத வண்ணம், பக்கிங்காம் கால்வாயில் மழை நீர் கடந்து சென்று கடலில் கலக்கும் வகையில், பக்கிங்காம் கால்வாயில் மணல் குவியல், அடைப்புகள் உள்ள பகுதிகளில் பொக்லைன் மூலம் மணல் திட்டுகள் அகற்றப்பட்டு, மழை நீர் அதி வேகத்தில் கடந்து சென்று கடலில் கலக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்நிலையில் முட்டுக்காடு முகத்துவார பகுதியில் நீரோட்டத்திற்கு தடையாகவும், வெள்ள அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலும் அடைபட்டுள்ள மணல் திட்டுகளை அகற்றுவதற்காக தமிழக அரசு ரூ.1.6 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இதையடுத்து மழை நீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலில் கலக்கும் முக்கிய இடமான முட்டுக்காடு கடல் பகுதியில் உள்ள முகத்துவாரத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அங்கு 5க்கும் மேற்பட்ட பொக்லைன் மூலம் மணல் திட்டுகள் அகற்றப்பட்டு, 50 அடி அகலத்தில் கால்வாய் தோண்டப்பட்டு அதிவேகத்தில் மழைநீர் கடலில் கலக்கும் வகையில் நீர்வளத்துறை சார்பில் வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகத்துவாரம் திறக்கப்பட்டது.இப்பணிகளை கலெக்டர் வீரப்பன் உத்தரவின் பேரில் திருப்போரூர் எம்எல்ஏ விஜயராஜ், நீர்வளத்துறையின் உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மணல் திட்டு அகற்றப்பட்டு முகத்துவாரம் திறக்கப்பட்டதால் தற்போது பக்கிங்காம் கால்வாயில் குளம் போல் தேங்கி கிடந்த மழை நீர் கடலில் கலந்து வருகிறது.


