Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரத்தில் குறுவட்ட அளவில் 21 மண்டல குழுக்கள் அமைக்கப்படும்: ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், ஜூன் 6: காஞ்சிபுரம் மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 துறை சார்ந்த 21 மண்டல குழுக்கள் குறுவட்ட அளவில் அமைக்கப்பட உள்ளது என்று கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், தென்மேற்கு பருவமழை-2026 முன்னிட்டு, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம், மாவட்ட கலெக்டர் சினேகா தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் சினேகா கூறியதாவது: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்காலம் ஜூன் மாதம் தொடங்கி, செப்டம்பர் மாதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 72 இடங்கள் பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாக கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. 3 மிக அதிக பாதிக்கப்படும் பகுதிகள், 21 அதிகம் பாதிக்கப்படும் பகுதிகள், 26 நடுத்தர மற்றும் 22 குறைவாக பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டயறியப்பட்ட 72 இடங்களில், பேரிடர் தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்ள 11 துறை சார்ந்த 21 மண்டல குழுக்கள் குறுவட்ட அளவில் அமைக்கப்படவுள்ளது. மேலும், காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில், வட்டார வாரியாக மீட்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக போக்குவரத்து திட்டம் மற்றும் மீட்புக் குழுவிற்கான ஏற்படுத்திட வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைகள் இணைந்து மழைக்காலங்களில் ஏற்படும் மரம் விழுதல் மற்றும் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளை உடனடியாக சரிசெய்து போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க தேவையான பணியாளர்கள் மற்றும் உபகரணங்களுடன் தேவையான பகுதிகளில் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்திட வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, நீர்வள ஆதார அமைப்பு, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி நிர்வாகம் மாநகராட்சி மற்றும் நகராட்சி, ஊரக வளர்ச்சித் துறை, மருத்துவம், சுகாதாரத்துறை மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களிடம் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இடர்கள் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்ந்த அனைத்து வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வெள்ள காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும் அனைத்துத் துறை மாவட்ட அலுவலர்களும், தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும், தென்மேற்கு பருவமழை காலத்தில் கனமழை, வெள்ளம், புயல் ஏற்படின் அதனை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடுகளுடன் எப்போதும் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் எஸ்பி அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், காஞ்சிபுரம் சப்-கலெக்டர் ஆஷிக் அலி, பெரும்புதூர் சப்-கலெக்டர் நல்லசிவன், காஞ்சிபுரம் உதவி ஆட்சியர் (பயிற்சி) அமன் திவாரி, அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.