குன்றத்தூர், நவ.5: குன்றத்தூர் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும் கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா, இந்த ஆண்டும் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார பெருவிழா வரும் 15ம் தேதியும், திருக்கல்யாண வைபவம் 16ம் தேதியும் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்வது தொடர்பாக அனைத்துத் துறை அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம், கோயில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன் தலைமை தாங்கினார். குன்றத்தூர் வட்டாட்சியர் சீனிவாசன் முன்னிலை வகித்து, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்து, அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டம் நிறைவடைந்ததை தொடர்ந்து, கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தின்போது பயன்படுத்தப்படும் சூரன் மற்றும் முருகப் பெருமானின் அவதார உருவ சிலைகள் சரியான முறையில் வடிவமைக்கப்பட்டு, வண்ணம் தீட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சரவணன், குணசேகர், சங்கீதா கார்த்திகேயன், ஜெயக்குமார், கோயில் செயல் அலுவலர் பிரகாஷ், கோயில் பணியாளர்கள், ஆன்மீக அன்பர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


