Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

எஸ்ஐஆரை ரத்து செய்ய வலியுறுத்தி ரயில் மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது

காஞ்சிபுரம், நவ.5: காஞ்சிபுரத்தில் எஸ்ஐஆரை ரத்து செய்ய வலியுறுத்தி, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைதான சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான எஸ்ஐஆர் நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஜனநாயக மீட்பு இயக்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது.

விசிக மாவட்ட செயலாளர் விப்பேடு அருள்நாதன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி செயலாளர் கமலநாதன், பாலாறு பாதுகாப்பு கூட்டிய கட்சி ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன், மக்கள் மன்ற நிர்வாகிகள் ஜெசி, மகேஷ், நல்லாட்சி தமிழக நிர்வாகி பழனி, விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பாசறை செல்வராஜ், மதி ஆதவன், இந்திரா அம்பேத்கர் வளவன், ஒருங்கிணைப்

பாளர் லாரன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில், 13 கோடி இந்தியர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய போராட்டக்காரர்கள், எஸ்ஐஆர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும், அதன்மூலம் நடத்தப்பட்ட தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும்.

தேர்தல் ஆணையர் நியமன முறையை மாற்ற வேண்டும், பழைய வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பழைய ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் காரணமாக காஞ்சிபுரம் டிஎஸ்பி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும், போலீசாரின் தடுப்புகளையும் மீறி, போராட்டக்காரர்கள் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி, மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார், அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் பழைய ரயில் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனைத்தொடர்ந்து, விசிக, சிபிஐ, மக்கள் மன்றம், பாலாற்று பாதுகாப்பு கூட்டியக்கம் உள்ளிட்ட ஜனநாயக மீட்பு இயக்கத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, பேருந்துகளில் ஏற்றி தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இதற்கிடையே, போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரு சிலரை அழைத்துச் செல்ல வாகனம் இன்றி ரயில் நிலைய பகுதியில் காத்திருந்தனர். அந்த நேரத்தில் திடீரென மின்சார ரயில் கடந்து சென்றதால், அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.