தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மறைமலைநகர் பேருந்து நிலையத்தில் இன்று முதல் தீபாவளி பஸ்கள் இயக்கம்: ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு
செங்கல்பட்டு, நவ.5: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மறைமலைநகரில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இன்றுமுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படு
கின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி திருவண்ணாமலை, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல இங்கிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனால் தற்போது மறைமலைநகர் விளையாட்டு திடலில் பந்தல் மற்றும் பெயர் பலகை, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.
கடந்த ஆயுத பூஜை பண்டிகையின்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மாநகர இணைப்பு பேருந்து மூலம் பயணிகளை அங்கிருந்து இலவசமாக அழைத்து வந்து இங்கிருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதேபோல், தீபாவளி பண்டிகைக்கும் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஊருக்குச் செல்ல இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள மக்கள் தங்களின் சொந்த ஊர்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு, சிரமமின்றி சென்னை திரும்புவதற்கும் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்காலிக பேருந்து நிலையத்தின் அமைப்புகள் மற்றும் வசதிகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பேருந்து நடத்துநர்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடும் இடம் மற்றும் பயணிகள் அமர்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பந்தல் உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். மேலும், தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தலின் அளவு மிகக் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் அதிகாரிகளை வெளுத்து வாங்கினார். இதனால் மழை நீர் தேங்கி பயணிகள் அவதியுறும் நிலை ஏற்படும். உடனடியாக பந்தலின் அளவை விரிவுபடுத்தி பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்ய உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் பேசுகையில், மழை வந்தால் பயணிகள் நினையாமல் இருப்பதற்காக நிழற்குடை அமைத்துள்ளோம். இங்கு மழை பெய்து சேறும் சகதியும் இருந்ததால் உடனடியாக எம்சாண்ட் கொட்டப்பட்டுள்ளது. மழை அதிகமாக வந்தால் அவர்கள் இருக்கும் இடத்திற்கே பேருந்து வந்து ஏற்றிச் செல்லும். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 1 துணை கண்காணிப்பாளர், 4 காவல் ஆய்வாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. ஆம்னி பேருந்து கூடுதல் கட்டணத்தை தடுத்து 10 பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளோம். மேலும் கட்டணத்தை உயர்த்தினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


