* விவசாயிகள் வேதனை
* அரசு நடவடிக்கை எடுக்குமா?
காஞ்சிபுரம், செப்.5: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான நெல் கொள்முதல் நிலையங்கள் மூடியே கிடப்பதால், அறுவடை செய்யப்பட்ட நெல் குவியல்கள் மழையில் நனைந்து முளைத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொர்ணாவாரி பருவ நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாமல், களத்தில் கொட்டி வைத்து விவசாயிகள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், சாலவாக்கம், களக்காட்டூர், விச்சாந்தாங்கல், காலூர், மேல்பெரமநல்லூர், வேடல், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளதால், நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய வளாகங்களிலும், திறந்த வெளியிலும் குவித்து வைத்து, அரசு நெல் கொள்முதல் நிலையம் எப்போது திறப்பார்கள் என காத்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், நெல் குவியல்கள் மழையில் நனைந்து பாழாகி விடுமே என்ற அச்சத்தில் வேதனை அடைந்து வருகின்றனர். கொட்டி வைத்துள்ள நெல் குவியல்கள் மழையில் நனைந்து சேதமடைவதைத் தடுக்கும் வகையில், விவசாயிகள் இரவு பகலாக தார்ப்பாய்களைக் கொண்டு மூடி பாதுகாத்து வருகின்றனர். இதனை மீறியும் சில இடங்களில் நெல் குவியல்கள் மழைக்கு நனைந்து முளைத்து வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து, நெல்மணிகளை கொள்முதல் செய்து, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காத்துக் கிடக்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


