பள்ளிப்பட்டு, நவ.4: ஆந்திராவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2வது கட்டமாக நாளை ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் ஆந்திர மாநில அரசு மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. அதே நேரத்தில் ஆந்திர எல்லை ஒட்டியுள்ள தமிழக பகுதியில் உள்ள மது கடைகளை மூட சித்தூர் மாவட்ட கலெக்டர் விடுத்த கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லை பகுதியில் அமைந்துள்ள மதுகடைகளை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன் பேரில் எல்லைப் பகுதியில் உள்ள பள்ளிப்பட்டு, அத்திமாஞ்சேரிபேட்டை, கோரகுப்பம், மத்தூர், கனகம்மாசத்திரம் ஆகிய 5 மதுக்கடைகள் நேற்று மாலை 5 மணிக்கு மூடப்பட்டது. நாளை மாலை 5 மணிக்கு நாளை மூடப்பட்ட ஐந்து மதுக்கடைகளும் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆந்திராவில் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி ஆந்திராவில் மற்றும் ஆந்திர எல்லை பகுதியில் அமைந்துள்ள தமிழக மதுக்கடைகள் மூடப்பட்டதால், தமிழகத்தில் மற்ற பகுதிகளில் வழக்கம் போல் செயல்படும் மதுக்கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மாலை 5 மணிக்கு மது கடைகள் மூடப்பட்டதால், முன்னதாகவே ஏராளமான மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.


