Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஞ்சி கச்சபேஸ்வரர் கோயில் நிலம் தனிநபர் பாதைக்கு வழங்க எதிர்ப்பு : கலெக்டரிடம், இந்து முன்னணியினர் மனு

காஞ்சிபுரம், ஆக.4: காஞ்சிபுரம்  கச்சபேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை தனிநபருக்கு பாதைக்காக வழங்கும் முயற்சியை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் மாவட்ட கலெக்டர் சினேகாவிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரேசன் தலைமையில், மாவட்ட கலெக்டர் சினேகாவிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியிருப்பதாவது: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், ஆட்டுப்பாக்கம் மதுரா மஞ்சம்பாடி கிராமத்தில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில், சென்னையை சேர்ந்த தனிநபர், தனது விவசாய நிலத்திற்கு செல்வதற்காக பாதை அமைக்க கோயில் நிலத்தை வழங்குமாறு விண்ணப்பித்தும், இதற்கு மாற்றாக வேறு நிலத்தை அவர் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலப்பரிமாற்ற நடவடிக்கைக்கு கடும் ஆட்சேபனை தெரிவிப்பதாகவும், கோயில் நிலங்கள் பக்தர்களால் இறைபணிக்காக வழங்கப்பட்டவை என்றும், அவற்றை தனிநபர் பயன்பாட்டிற்காக வழங்குவது கோயில் நலனுக்கும், ஆகம மரபுகளுக்கும் முரணானது என்றும் இதுபோன்ற நடவடிக்கைகள் எதிர்காலத்தில் கோயில் நில ஆக்கிரமிப்புகளுக்கு வழிவகுக்கும் அபாயமும் உள்ளதாகவும் இந்து முன்னணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தை உடனடியாக நிராகரிக்க வேண்டுமென்றும், கச்சபேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களையும் அளவீடு செய்து, வேலி அமைத்து, அறிவிப்பு பலகைகள் நிறுவி, ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் எதிர்ப்பை மீறி கோயில் நிலத்தை வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தால், இந்து முன்னணி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று இந்து முன்னணியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.