காஞ்சிபுரம், நவ.3: கிளார் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் 8ம் ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாணம் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில், அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அறம்வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தேமடைந்து காணப்பட்ட நிலையில், கிராம மக்கள் சார்பில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இந்த, கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஸம்வத்ஸாரபிஷேகம் என அழைக்கப்படும் வருஷாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.
உற்சவத்தையொட்டி நேற்று கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, மஹா அபிஷேகம், யாக வேள்வி, சங்காபிஷேகம் நடத்தப்பட்டு, தொடர்ந்து மஹா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடும் செய்யப்பட்டு, வருஷாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது, அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து அகத்தீஸ்வரருக்கும், அறம்வளர்நாயகிக்கும் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் முக்கிய வீதி வழியாக உலா வந்தனர். திருக்கல்காயண உற்சவத்தையொட்டி அறம்வளர் நாயகியும், அகத்தீஸ்வரரும் திருமண கோலத்தில் தம்பதி சமேதராய் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


