திருப்போரூர், குன்றத்தூர் பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை : தீபாவளி பரிசு வாங்குவதாக வந்த புகாரின் அடிப்படையில் அதிரடி
திருப்போரூர், நவ.3: திருப்போரூர் மற்றும் குன்றத்தூர் பத்திரப்பதிவு அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள தெற்கு மாடவீதியில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்போரூர், தண்டலம், கண்ணகப்பட்டு, காலவாக்கம், இள்ளலூர், காட்டூர், வெண்பேடு, நெல்லிக்குப்பம், கொட்டமேடு, செம்பாக்கம், பையனூர், ஆமூர், சிறுதாவூர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சொத்துக்கள் தொடர்பான கிரையம், அடமானம், உயில், தானம், செட்டில்மெண்ட், வங்கி கடன் உள்ளிட்ட பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது, சார்பதிவாளர் பொறுப்பில் தனசேகரன் என்பவர் உள்ளார். இந்த அலுவலகத்தில் திடீரென செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் சக்கரபாணி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை சோதனையில் ஈடுபட்டனர்.
பதிவுப்பணிக்கு வந்திருந்த பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பத்திரம் பதிவு செய்ய வந்தவர்களை மட்டும் திருப்பி அனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மற்றவர்களை அங்கேயே அமர வைத்தனர். மேலும், அவர்களின் அலைபேசிகளை வாங்கி ஜிபே, போன் பே, பேடிஎம் ஆகியவற்றின் மூலம் பணப்பரிவர்த்தனைகள் ஏதும் செய்துள்ளார்களா என்று ஆய்வு செய்தனர்.
மேலும், பதிவு அலுவலக ஊழியர்கள் தவிர மற்றவர்கள் யார் வேலை செய்கிறார்கள் என்று கணக்கெடுத்தனர். இந்த, சோதனையில் லஞ்சப்பணம் எதுவும் சிக்கியதா என்பது தெரியவில்லை. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் பரிசு பொருட்கள் மற்றும் பணம் வாங்குவதாக வந்த புகார்களின் அடிப்படையில் நேற்று குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் கீதா தலைமையில் வந்த அதிகாரிகள், தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
பத்திரப்பதிவு செய்ய வந்த நபர்கள் மட்டும் ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர். சோதனையின் முடிவில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது தெரியவரும் என்று சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வருவதாக வந்த தகவலையடுத்து, அங்கு பணியில் இருந்த சார்பதிவாளர், அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றது குறிப்பிடத்தக்கது


