மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் மூன்று அரசு பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து: 22 பயணிகள் காயம்; 3 கி.மீ தூரம் நெரிசல்
மதுராந்தகம், நவ.3: மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் மூன்று அரசு பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய விபத்தில் இரு ஓட்டுனர்கள் உள்பட 22 பயணிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 3 கிமீ தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வடக்கு பைபாஸ் ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை ஒருவர் பைக்கில் திருச்சி மார்க்கத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து கும்பகோணம் சென்ற அரசு விரைவு பேருந்து டிரைவர், முன்னே சென்ற பைக்கின்மீது மோதாமல் இருப்பதற்காக, சாலையின் மையப்பகுதியில் திடீரென சடன் பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார்.
அப்போது பேருந்தை பின்தொடர்ந்து வந்த மணப்பாறை சென்ற அரசு பேருந்து, நின்று கொண்டிருந்த பேருந்தின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கும்பகோணம் அரசு பேருந்து, சாலை தடுப்பு சுவரில் மோதி எதிர்திசைக்கு வேகமாக சென்றது. அதே சமயம், மணப்பாறை சென்ற அரசு பேருந்தை பின்தொடர்ந்து பேராவூரணி சென்ற அரசு பேருந்து என இரண்டும் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக் கொண்டன. இதில் மணப்பாறை சென்ற அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த டிரைவர், கண்டக்டர் மற்றும் 20க்கும் மேற்பட்ட பயணிகள் சிறிய காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். மதுராந்தகம் போலீசார், விபத்தில் காயமடைந்த அனைவரையும் மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்தால் மதுராந்தகம் அருகே ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் திருச்சி செல்லும் மார்க்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுமார் 3 கிமீ தூரத்துக்கு ஏராளமான வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றன.
விபத்தில் சிக்கிய 3 அரசு பேருந்துகளையும் கிரேன் மூலம் போலீசார் அகற்றி, ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், இந்தப் பேருந்து விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


